தேடுதல்

தவக்கால ஆண்டு தியானம் தவக்கால ஆண்டு தியானம் 

வரலாற்று நினைவுகளின் அழகைக் காட்ட அழைப்பு

இன்றைய உலகம், நிகழ்பொழுதை மட்டும் உண்மை என்பதையும், அந்த நிகழ்பொழுதில், நாம் மட்டுமே இவ்வுலகின் மையம் என்பதையும் உணர்த்தும் முயற்சிகள் நடக்கின்றன - அருள்பணி ஜியான்னி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நம்மை மையப்படுத்தி வாழ்வு இயங்குகிறது என்று, இவ்வுலகம் சொல்லித்தரும் தவறான வழியிலிருந்து வெளியேறி, இறைவனின் வார்த்தைக்குச் சாட்சியாக பணியாற்றுவதை நம் வாழ்வின் மையமாக்கவேண்டும் என்று, அருள்பணி பெர்னார்தோ ஜியான்னி அவர்கள் வழங்கிய தவக்கால தியான உரையில் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், திருப்பீட பொறுப்பாளர்களும், மார்ச் 10, இஞ்ஞாயிறு மாலை முதல், தெய்வீகப் போதகர் இல்லத்தில் மேற்கொண்டு வரும் தவக்கால தியானத்தை வழிநடத்தும் புனித பெனடிக்ட் துறவு சபையின் அருள்பணியாளர் ஜியான்னி அவர்கள், இச்செவ்வாய் மாலை வழங்கிய உரையில், நினைவுகளின் அழகை வலியுறுத்திப் பேசினார்.

இன்றைய உலகம், நிகழ்பொழுதை மட்டும் உண்மை என்று காட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்றும், அந்த நிகழ்பொழுதில், நாம் மட்டுமே இவ்வுலகின் மையம் என்பதை உணர்த்தவும் முயற்சிகள் நடக்கின்றன என்றும் அருள்பணி ஜியான்னி அவர்கள் தன் உரையில் எச்சரிக்கை விடுத்தார்.

இத்தகைய முயற்சிகளுக்கு ஒரு மாற்றாக, நாம் வரலாற்றின் நினைவுகளை வலியுறுத்த அழைக்கப்பட்டுள்ளோம் என்று கூறிய அருள்பணி ஜியான்னி அவர்கள், திருப்பலி வேளையில், கிறிஸ்துவின் நினைவை திருஅவை வலியுறுத்துகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Evangelii Gaudium திருத்தூது அறிவுரை மடலில் கூறியுள்ளதை சுட்டிக்காட்டினார்.

வரலாற்று நினைவுகள் என்ற கொடையை நாம் இழந்தால், எதிர்காலத்தை குறித்த நம்பிக்கையையும் இழக்க நேரிடும் என்பதை, தன் உரையில் தெளிவுபடுத்திய அருள்பணி ஜியான்னி அவர்கள், இத்தகைய ஒரு குறையால் சூழப்பட்டுள்ள இளைய தலைமுறையினருக்கு நாம் நம்பிக்கையூட்டும் வரலாற்று நினைவுகளை வலியுறுத்த அழைக்கப்பட்டுள்ளோம் என்று கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 March 2019, 15:51