ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் 

ஏழைகளின் அழுகுரலைக் கேட்பது குறித்த கருத்தரங்கு

நம் பூமிக்கோளத்தின் வருங்காலத்தை வடிவமைப்பது குறித்து, உலகளாவிய கூட்டங்கள் மற்றும் உச்சி மாநாடுகளில் விவாதங்கள் நடத்துகிறோம், நம்மிடம் வளர்ச்சித்திட்ட இலக்குகள் உள்ளன, அவற்றை அமல்படுத்துவதற்கு நேரம் வந்துள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

“மதங்களும், நீடித்த நிலையான வளர்ச்சித்திட்ட இலக்குகளும்: இப்பூமியின் ஏழைகளின் அழுகுரலைக் கேட்பது” என்ற தலைப்பில், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை, மார்ச் 7, வருகிற வியாழன் முதல், 9, சனிக்கிழமை வரை, வத்திக்கானில், பன்னாட்டு கருத்தரங்கு ஒன்றை நடத்துவுள்ளது.

இந்த பன்னாட்டு கருத்தரங்கு பற்றி, மார்ச் 05, இச்செவ்வாயன்று செய்தியாளர் கூட்டத்தில் விளக்கிய, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கம் குறித்து எடுத்துரைத்தார்.

வத்திக்கானில் வருகிற வியாழனன்று தொடங்கும் இக்கருத்தரங்கில், ஐ.நா. கூட்டத்தில், 190க்கும் அதிகமான நாடுகள் ஏற்றுக்கொண்ட 17 வளர்ச்சித்திட்ட இலக்குகள் செயல்படுத்தப்பட வேண்டியதன் உடனடித் தேவை குறித்து அலசப்படும் என்று, கர்தினால் டர்க்சன் அவர்கள் கூறினார்.

இரண்டாயிரமாம் ஆண்டில் ஐ.நா. நடத்திய மில்லென்னியம் உச்சி மாநாட்டில் 190க்கும் அதிகமான நாடுகள் 17 வளர்ச்சித்திட்ட இலக்குகளை ஏற்றுக்கொண்டன, அதற்குப் பின்னர் இந்த இலக்குகள் தொடர்பாக பன்னாட்டு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன, 2014ம் ஆண்டில், ஐ.நா. பணிக்குழு நடத்திய கூட்டத்தில், வளர்ச்சி தொடர்பாக, 17 இலக்குகளும், 169 திட்டங்களும் கொண்டுவரப்பட்டன என்றார், கர்தினால் டர்க்சன்.

வளர்ச்சியில் மதங்களின் பங்கு

உலகின் வளர்ச்சியில் மதங்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது என்றும், நூற்றாண்டுகளாக, சமுதாயத்தின் ஒரு மூலைக்கல்லாக அமைந்துள்ள கல்வியை வழங்குவதில் மதங்கள் முக்கிய பங்காற்றுகின்றன என்றும் உரைத்த கர்தினால் டர்க்சன் அவர்கள், மனித முன்னேற்றம் மற்றும் ஐ.நா. இலக்குகளை எட்டுவதில், சமயங்கள் எவ்விதத்தில் உதவ முடியும் என, இக்கருத்தரங்கில் ஆராயவிருப்பதாகத் தெரிவித்தார்.

வத்திக்கானில், ஆயர்கள் மாமன்ற புதிய அரங்கில் நடைபெறவுள்ள இக்கருத்தரங்கு பற்றி, கர்தினால் பீட்டர் டர்க்சன், FAO எனப்படும் ஐ.நா. வின் உணவு, மற்றும் வேளாண்மை அமைப்பின் காலநிலை, பல்வகை உயிரினம், நிலம் மற்றும் நீர் வளர்ச்சித் துறையின் இயக்குனர் René Castro, உலகளாவிய இருபால் துறவு சபைகளின் நீதி, அமைதி மற்றும் படைப்பின் ஒருங்கமைவு பிரிவின் இணைச் செயலர் அருள்சகோதரி Sheila Kinsey ஆகிய மூவரும், இச்செவ்வாயன்று செய்தியாளர் கூட்டத்தில் விளக்கினர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 March 2019, 15:03