வத்திக்கான் தபால் துறை வெளியிட்டுள்ள தபால் தலை - கோப்புப் படம் வத்திக்கான் தபால் துறை வெளியிட்டுள்ள தபால் தலை - கோப்புப் படம் 

'குழந்தை இயேசு மருத்துவமனை' - சிறப்பு தபால் தலை

உரோம் நகரில் உள்ள 'குழந்தை இயேசு மருத்துவமனை' தன் 150ம் ஆண்டை சிறப்பிப்பதையொட்டி, ஒரு சிறப்பு தபால் தலை, மார்ச் 19, வருகிற செவ்வாயன்று வெளியிடப்படும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உரோம் நகரில் குழந்தைகளுக்கென நிறுவப்பட்டுள்ள 'குழந்தை இயேசு மருத்துவமனை' தன் 150ம் ஆண்டை சிறப்பிப்பதையொட்டி, ஒரு சிறப்பு தபால் தலை, மார்ச் 19, வருகிற செவ்வாயன்று வெளியிடப்படும் என்று வத்திக்கான் தபால் துறை அறிவித்துள்ளது.

Arabella Salviati என்ற உயர்குடி பெண்மணி ஒருவரது முயற்சியால், 1869ம் ஆண்டு நிறுவப்பட்ட குழந்தை இயேசு மருத்துவமனை, தற்போது, ஐரோப்பாவில் மிகச் சிறந்த குழந்தைகள் மருத்துவ மனையாகவும், குழந்தைகள் குறித்த மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்ளும் நிறுவனமாகவும் செயல்படுகிறது.

மேலும், 1929ம் ஆண்டு திருத்தந்தை 11ம் பயஸ் அவர்களின் முயற்சியால், வத்திக்கானுக்கும், இத்தாலி நாட்டிற்கும் இடையே ஏற்பட்ட இலாத்தரன் ஒப்பந்தத்தின் 90ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் மற்றொரு தபால் தலையும் மார்ச் 19ம் தேதி, வெளியாகிறது.

மேலும், ஆப்ரிக்காவிலிருந்து இத்தாலிக்கு வந்துசேர்ந்த குடிபெயர்ந்தோரை வைத்து வர்த்தகம் செய்துவந்தவர்களின் கொடுமைக்கு எதிராக, அம்மக்களுக்கு அடைக்கலம் வழங்கும் நோக்கத்துடன், இத்தாலியின் பாரி நகரில் இல்லம் ஒன்றை உருவாக்கிய அருள்பணி ஜியூசப்பே தியானா அவர்கள், இவ்வர்த்தகர்களுடன் மேற்கொண்ட மோதல்களின் விளைவாக, 1994ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி கொல்லப்பட்டார்.

அவர் கொலையுண்டதன் 25ம் ஆண்டு நினைவு சிறப்பிக்கப்படும் இவ்வாண்டில், அவரது நினாவாக, மற்றுமொரு தபால் தலை மார்ச் 19ம் தேதி வெளியிடப்படுகிறது.

அத்துடன், 1919ம் ஆண்டு, போலந்து நாட்டிற்கும், திருப்பீடத்திற்கும் இடையே தூதரக உறவுகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டதன் முதல் நூற்றாண்டு நினைவாக, மற்றுமொரு தபால் தலை, மார்ச் 29ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 March 2019, 15:52