தேடுதல்

Vatican News
திருஅவை அதிகாரிகளுடன் தவக்காலத் தியானத்தை  மேற்கொண்டுவரும் திருத்தந்தை திருஅவை அதிகாரிகளுடன் தவக்காலத் தியானத்தை மேற்கொண்டுவரும் திருத்தந்தை  (Vatican Media)

தவக்காலத் தியான உரை - பணியும், உடன்பிறந்த உறவும்

நம்பிக்கை தரும் பணியில் ஈடுபடவேண்டிய திருஅவை, உடன்பிறந்த உணர்வை வளர்க்கும் குழுமங்களை உருவாக்கவேண்டும், அனைவரையும் வரவேற்கும் மனநிலையை வளர்க்கவேண்டும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், திருப்பீடத்தின் பல்வேறு துறைகளின் பொறுப்பாளர்களும் மேற்கொண்டு வரும் தவக்காலத் தியான முயற்சியின் நான்காவது நாளான இப்புதன் மாலையில், இத்தியானத்தை வழிநடத்திச் செல்லும் புனித பெனடிக்ட் துறவு சபையின் அருள்பணியாளர் பெர்னார்தோ ஜியான்னி அவர்கள் வழங்கிய தியான உரையில், பணியையும், உடன்பிறந்த உறவையும் இணைத்து, கருத்துக்களை வழங்கினார்.

திருஅவையைக் கட்டியெழுப்பும் உண்மையான பணி, மற்றவர்களை, உடன் பிறந்தோராக ஏற்றுக்கொள்ளும் உணர்வை அடித்தளமாகக் கொண்டு செயல்படவேண்டும் என்று, அருள்பணி ஜியான்னி அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

தன் கருத்தை விளக்கிக் கூற, 2019ம் ஆண்டின் துவக்கத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட உலக அமைதி நாள் செய்தியையும், இன்னும் சில புனிதர்களின் கூற்றுக்களையும், அருள்பணி ஜியான்னி அவர்கள் மேற்கோள்களாகப் பயன்படுத்தினார்.

அரசியல் தலைவர்கள், தங்கள் சுயநலத்திற்கு உதவியாக இருக்கும் கருத்துக்களுக்கு முதலிடம் தரும் வேளையில், அதைக் காணும் இளையோர், சமுதாயத்தின் விளிம்புகளுக்கு தள்ளப்பட்டதை போல் உணர்வதையும், அதனால், அவர்கள் நம்பிக்கை இழப்பதையும் காணமுடிகிறது என்று அருள்பணி ஜியான்னி அவர்கள் தன் தியான உரையில் சுட்டிக்காட்டினார்.

இத்தகையச் சூழலில், நம்பிக்கை தரும் பணியில் ஈடுபடவேண்டிய திருஅவை, முதலில் உடன்பிறந்த உணர்வை வளர்க்கும் குழுமங்களை உருவாக்கவேண்டும் என்றும், அனைவரையும் வரவேற்கும் மனநிலையை வளர்க்க வேண்டும் என்றும் அருள்பணி ஜியான்னி அவர்கள் எடுத்துரைத்தார்.

தன்னலத்தைத் துறப்பது, ஆண்டவரிடம் திரும்பி வருவது, நற்செய்திக்கு செவிமடுப்பது, ஒருங்கிணைப்பது, துன்புறும் கிறிஸ்துவின் உடலோடு இணைவது, நம்பிக்கையை வளர்ப்பது ஆகிய கருத்துக்களையும் தன் தியான உரையில் விளக்கிக் கூறினார், அருள்பணி ஜியான்னி.

14 March 2019, 14:54