தேடுதல்

Vatican News
உரோம் நகருக்கருகே அரிச்சா எனுமிடத்திலுள்ள, தெய்வீகப் போதகர் தியான இல்லத்தில் உரோம் நகருக்கருகே அரிச்சா எனுமிடத்திலுள்ள, தெய்வீகப் போதகர் தியான இல்லத்தில்  (Vatican Media)

திருப்பீட அதிகாரிகளின் ஆண்டு தியானத்தில் உரை

இவ்வுலகை அழிவுக்குக் கொணரும் சக்தியுள்ள தவறானப் படிப்பினைகள் எனும் பெரும் நெருப்புக்கு எதிராக, நம்முள் மூட்டப்பட்டுள்ள சிறு தீபமானது தூண்டப்படவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அன்பு மற்றும் நம்பிக்கையின் நகராக எருசலேம் அக்காலத்தில் உருவாக்கப்பட்டதுபோல், இன்றைய உலகின் நகரங்கள் அனைத்தும் அதே வழியில், அழகு, அமைதி மற்றும் செபத்தின் நகரங்களாக மாற ஆவல் கொள்ளவேண்டும் என்று, திருப்பீட அதிகாரிகளுக்கு ஆண்டு தியான உரை வழங்கிய புனித பெனடிக்ட் சபையின் துறவி, பெர்னார்தோ ஜியான்னி அவர்கள் கூறினார்.

ஒவ்வோர் ஆண்டும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், திருப்பீட அதிகாரிகளும் தவக்காலத்தின் முதல் வாரத்தில் தங்கள் ஆண்டு தியானத்தை மேற்கொண்டு வரும் வழக்கத்தின்படி, மார்ச் 10, இஞ்ஞாயிறன்று, உரோம் நகருக்கருகே அரிச்சா எனுமிடத்தில் அமைந்துள்ள, தெய்வீகப் போதகர் தியான இல்லத்தில், துவங்கிய தியானத்தை, அருள்பணி ஜியான்னி அவர்கள் வழிநடத்தி வருகிறார்.

இவ்வாரம் வெள்ளிக்கிழமை முடிய நடைபெறும் இந்த 6 நாள் தியானத்தில், புதியதொரு புனித வரலாறு இவ்வுலகில் படைக்கப்படவேண்டும் என்பது இறைவனின் திட்டமாக இருக்க, வானகத்திலிருப்பதுபோல், இவ்வுலகிலும் இறையரசு வரவேண்டும் என்ற ஆவலுடன் இப்பணியை ஆற்றவேண்டியது நம் கடமை என்று அருள்பணி ஜியான்னி அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.

தூய ஆவியார் வகுத்துள்ள இத்திட்டம் கட்டியெழுப்பப்படுவதற்கு, அவர் நம்மில் புளிக்காரமாக செயல்படுவதற்கு நாம் அவரை அனுமதிக்க வேண்டும் என்று அருள்பணி ஜியான்னி அவர்கள் கேட்டுக்கொண்டார்.

இவ்வுலகையே அழிவுக்குக் கொணரும் சக்தியுள்ள தவறானப் படிப்பினைகள் எனும் பெரும் நெருப்புக்கு எதிராக, நம்முள் மூட்டப்பட்டுள்ள சிறு தீபமானது தூண்டப்படவேண்டும் என்றும் கூறினார், அருள்பணி ஜியான்னி.

எருசலேம் நகரின் வருங்கால மேன்மையைக் குறித்து, இறைவாக்கினர் எசாயா நூலின் 60ம் பிரிவில் கூறப்பட்டுள்ளவற்றை மையமாக வைத்து, மார்ச் 11, இத்திங்களன்று காலை தன் தியான உரையை, அருள்பணி ஜியான்னி அவர்கள் வழங்கினார்.

11 March 2019, 15:36