FAO கருத்தரங்கில் கலந்துகொண்ட திருப்பீடப் பிரதிநிதிகள் FAO கருத்தரங்கில் கலந்துகொண்ட திருப்பீடப் பிரதிநிதிகள் 

படைப்பின் பாதுகாப்பில் திருஅவை கொண்டிருக்கும் ஆர்வம்

அமேசான் பகுதியை மையப்படுத்தி, வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர் மாமன்றத்திற்கு தயாரிப்பாக, ஏற்கனவே 45 கூட்டங்கள் இடம்பெற்றுள்ளன - கர்தினால் பால்திசேரி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இறைவா உமக்கே புகழ் என்ற தலைப்பில் திருத்தந்தை வெளியிட்ட சுற்று மடல் குறித்தும், பழங்குடியின மக்களின் இயற்கையோடு இணைந்த வாழ்வு குறித்தும் திருப்பீட அதிகாரிகள், இவ்வியாழனன்று உரோம் நகரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.

உரோம் நகரிலுள்ள உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தில், 'பழங்குடியின மக்கள் இயற்கையின் பாதுகாவலர்கள் - திருத்தந்தையின் இறைவா உமக்கே புகழ் சுற்று மடல்' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச் செயலர் கர்தினால் லொரென்சோ பால்திசேரி அவர்கள்,  அமேசான் பகுதியை மையப்படுத்தி, இவ்வாண்டு அக்டோபர் மாதம், வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர் மாமன்றத்திற்கு தயாரிப்பாக, ஏற்கனவே 45 கூட்டங்கள் இடம்பெற்றுள்ளன என்பதை எடுத்துரைத்து, படைப்பின் பாதுகாப்பில் திருஅவை கொண்டிருக்கும் ஆர்வத்தைச் சுட்டிக்காட்டினார்.

உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் கூட்டங்களில் திருப்பீடப் பிரதிநிதியாகப் பங்கேற்கும் அருள்பணி Fernando Chica Arellanno அவர்கள், இதே கருத்தரங்கில் உரையாற்றியபோது, பூமியின் அழுகுரலுக்கு நாம் செவிமடுக்க வேண்டும் எனவும், இலாப நோக்கில் செயல்படாமல், வருங்கால சமுதாயத்தை மனதில்கொண்டு தொலைநோக்குப் பார்வையுடன் விவசாயத் தொழில் புரியும் பழங்குடியின மக்களுடன் இன்றைய நவீன சமூகம் கலந்துரையாடலில் ஈடுபட்டு கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது என்பதையும் வலியுறுத்திக் கூறினார்.

திருப்பீட நாளிதழ் L'Osservatore Romanoவின் இஸ்பானிய மொழிப் பதிப்பின் தலைவராகப் பணியாற்றும் Silvina Pérez அவர்கள் உரையாற்றுகையில், பூர்வீக இன மக்களின் மொழி முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார்.

இன்றைய பழங்குடியின பெண்களின் வாழ்க்கை நிலைகள் முன்னேற்றப்பட வேண்டும், இயற்கையை குறித்து இவர்கள் கொண்டிருக்கும் அனுபவ அறிவு பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார் Silvina Pérez.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 March 2019, 14:38