தேடுதல்

Vatican News
புனித பூமியின் எருசலேம் நகரம் புனித பூமியின் எருசலேம் நகரம்  (AFP or licensors)

எருசலேம் தலத்திருவையுடன் ஒருங்கிணைப்பு வழங்க...

2019ம் ஆண்டில் புனித பூமியின் வளர்ச்சித் திட்டங்களுக்கு, தவக்காலத்தில் நிதி உதவி வழங்க, அனைத்துலக கத்தோலிக்கருக்கு விண்ணப்பம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

எருசலேம் தலத்திருவையுடன் நம் ஒருங்கிணைப்பையும், உறுதுணையையும் வெளிப்படுத்தும் வண்ணம், 2019ம் ஆண்டில் புனித பூமியின் வளர்ச்சித் திட்டங்களுக்கு, தவக்காலத்தில் நிதி உதவி வழங்க, அனைத்துலக கத்தோலிக்கருக்கு விண்ணப்பம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

புனித பூமியின் வளர்ச்சிக்கென, ஒவ்வோர் ஆண்டும், தவக்காலத்தின் புனித வாரத்தில், குறிப்பாக, புனித வெள்ளியன்று திரட்டப்படும் நிதியைக் குறித்து இவ்வாண்டு, கீழைவழிபாட்டு பேராயத்தின் தலைவர், கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி அவர்களும், இப்பேராயத்தின் செயலர், பேராயர் சிரில் வாசில் அவர்களும் தங்கள் விண்ணப்பத்தை, வெளியிட்டுள்ளனர்.

இயேசு எருசலேம் நகருக்குள் நுழைந்தபோது மக்கள் மேற்கொண்ட குருத்தோலை பவனியுடன் துவங்கும் புனித வாரம், பெத்தானியாவில் அவரது திருவடிகள் நறுமணத் தைலத்தால் அர்ச்சிக்கப்பட்டது, மேலறையில் நிகழ்ந்த இரவுணவு, கெத்சமனி தோட்டம், கல்வாரி, மற்றும் அடக்கம் செய்யப்பட கல்லறை என்ற அனைத்து தலங்களையும் கொண்ட புனித பூமியை, நம் வழிபாட்டு நினைவுக்குக் கொணர்கிறது என்று, கர்தினால் சாந்த்ரி அவர்கள், தன் விண்ணப்பத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிறிஸ்துவைப்போல், நாமும், சுயநல விருப்பங்களிலிருந்து வெளியேறி, அடுத்தவரைச் சந்திக்கவும், சமுதாயத்தின் விளிம்பில் வாழ்வோருக்கு உதவிகள் செய்யவும் விடுக்கப்படும் ஓர் அழைப்பே புனித வார நிகழ்வுகள் என்று, கர்தினால் சாந்த்ரியின் விண்ணப்பச் செய்தி கூறுகிறது.

திருத்தூதர் பேதுரு பயணித்த புனித பூமியில், அவருக்கு அடுத்ததாக, 1964ம் ஆண்டு, முதல் முறையாக அவரது வழித் தோன்றலான புனித 6ம் பவுல் புனித பூமிக்கு திருத்தூதுப் பயணம் மேற்கொண்டதையும், அந்த பயணத்தின் விளைவாக, 1974ம் ஆண்டு, Nobis in Animo என்ற திருத்தூது அறிவுரை மடல் வழியே, புனித பூமியின் வளர்ச்சி நிதிக்கு அழைப்பு விடுத்ததையும், கர்தினால் சாந்த்ரி அவர்கள், தன் விண்ணப்ப மடலில் குறிப்பிட்டுள்ளார்.

28 March 2019, 13:59