தேடுதல்

திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் 

ஒன்றன் பின் ஒன்றாக இஸ்லாமிய நாடுகளில் திருத்தந்தை

புலம்பெயர்ந்த மக்களை ஓர் அச்சுறுத்தலாக நோக்காமல், ஓர் வாய்ப்பாக நோக்கும்படி, அவர்களுக்கு அடைக்கலம் தரும் நாடுகளை விண்ணப்பிக்கிறது திருஅவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மற்றவர்களை சென்று சந்திக்கும் கலாச்சாரத்தைத் தாங்கியவராக, நம்பிக்கையின் பணியாளராக, மொராக்கோ நாட்டிற்குச் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்பிக்கையின் பாதையில் ஒவ்வொருவரும் நடைபோட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துபவராக விளங்குகிறார் என்று கூறினார், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாள்கள், திருத்தந்தை மேற்கொள்ளும் மொராக்கோ நாட்டு திருத்தூதுப் பயணம் குறித்து, வத்திக்கான் வானொலிக்கு பேட்டியளித்த கர்தினால் பரோலின் அவர்கள், ஒன்றன் பின் ஒன்றாக இஸ்லாமிய நாடுகளுக்கு திருத்தந்தை மேற்கொள்ளும் இப்பயணங்கள், வெவ்வேறு கலாச்சாரங்களுடன் நாம் கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும் என்று திருத்தந்தை கொண்டிருக்கும்  நம்பிக்கையை நமக்கும் ஊட்டுவதாக உள்ளன என்றார்.

நாமனைவரும் சகோதரர்கள் என்பதை மனதில் கொண்டு, ஒவ்வொருவரையும், அவரவர் தனித்தன்மைகளோடு ஏற்றுக்கொள்வதும், நம்மையும், நம் உடன் உழைப்பாளர்களையும் மதிப்பதும் முக்கியம் என்பதை, திருத்தந்தையின் பயணங்கள் நமக்கு காட்டுகின்றன எனவும் எடுத்துரைத்தார், கர்தினால் பரோலின்.

நற்செய்தி அறிவிப்பின் அடிப்படை கூற்றே, நாமனைவரும் ஒரே தந்தையின் குழந்தைகள் என்றிருக்கையில், அனைவரையும் அங்கீகரித்து ஏற்றுக்கொள்வது மிக முக்கிய கூறு என்பதையும் கர்தினால் பரோலின் அவர்கள் வலியுறுத்தினார்.

மொராக்கோ நாட்டில் திருத்தந்தை, புலம்பெயர்ந்த மக்களை காரித்தாஸ் மையத்தில் சந்திக்க உள்ளதைப் பற்றியும் தன் நேர்முகத்தில் குறிப்பிட்ட கர்தினால் பரோலின் அவர்கள், ஒவ்வொருவரும் தங்கள் சொந்த நாட்டிலேயே சுதந்திரமாக வாழவேண்டும் என்பதை திருஅவை வலியுறுத்தினாலும், வாழமுடியாதச் சூழல்களில் குடிபெயரும் மக்களின் உரிமைகளை மதிப்பதுடன், அவர்களை ஓர் அச்சுறுத்தலாக நோக்காமல், ஓர் வாய்ப்பாக நோக்கும்படி, அவர்களுக்கு அடைக்கலம் தரும் நாடுகளை விண்ணப்பிக்கிறது என்றார்.

மொராக்கோவில் சிறுபான்மையினராக வாழும் மக்களை சந்திக்கச் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அபுதாபியில் திருப்பலியின்போது கண்ட மக்களின் ஆர்வத்தை இங்கேயும் காண்பதோடு, அதே போன்று, தன் ஊக்கத்தையும் இம்மக்களுக்கு வழங்குவார் என மேலும் கூறினார், திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 March 2019, 14:36