பேராயர் பெர்னார்தித்தோ அவுசா பேராயர் பெர்னார்தித்தோ அவுசா  

பாலின சமத்துவம், மற்றும், பாலின கருத்தியலாக்கம்

உடலியல், உயிரணுக்கள் அடிப்படையில் 'பெண்கள்' என்றால் யார் என்பதைக் குறித்த தெளிவும், அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் இவ்வுலகில் வளரவேண்டும் - பேராயர் அவுசா

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் முனைப்புடன், மார்ச் 20, இப்புதனன்று, திருப்பீடம் ஏற்பாடு செய்திருந்த ஒரு பன்னாட்டு கருத்தரங்கிற்கு வருகை தந்த பிரதிநிதிகளை, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் வரவேற்றுப் பேசினார்.

ஐ.நா, அவை தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில், திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்றுவரும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், பாலின சமத்துவம், மற்றும், பாலின கருத்தியலாக்கம் என்ற தலைப்பில், திருப்பீடமும், Heritage Foundation என்ற அறக்கட்டளையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார்.

பெண்மை, தாய்மை, என்ற நிலைகளை வரையறுப்பதில், வேறுபட்ட கருத்துக்கள் நிலவும் இன்றைய உலகில், உடலியல், உயிரணுக்கள் அடிப்படையில், 'பெண்கள்' என்றால் யார் என்பதைக் குறித்த தெளிவும், அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் இவ்வுலகில் வளரவேண்டும் என்று பேராயர் அவுசா அவர்கள் எடுத்துரைத்தார்.

உடல் மற்றும் உயிரணு மாற்றங்களைக் குறித்து, மரபு வழி கண்ணோட்டம் கொண்டு மட்டும் பார்க்கும்போது, திருநங்கைகள் குறித்த தெளிவு இல்லாததால், அவர்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இன்றி தடுமாறுகிறோம் என்பதை பேராயர் அவுசா அவர்கள் தன் வரவேற்புரையில் கூறினார்.

நாம் கொண்டிருக்கும், மரபுவழி உடல் சார்ந்த பாலின பிரிவுகளுக்குள் வரையறுக்கப்பட முடியாதவர்களை, அவர்களது அடைப்படை மனித மாண்புடன் நடத்தவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் விமானப் பயணம் ஒன்றில், செய்தியாளர்களிடம் கூறிய கருத்தை, பேராயர் அவுசா அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

பாலின சமத்துவம், மற்றும், பாலின கருத்தியலாக்கம் என்ற தலைப்பில், திருப்பீடமும், Heritage Foundation என்ற அறக்கட்டளையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், திருப்பீடத்தின் சார்பாகவும், Heritage Foundation அறக்கட்டளை சார்பாகவும் பேசவிருப்போரை, பேராயர் அவுசா அவர்கள், அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 March 2019, 15:42