தேடுதல்

Vatican News
பேராயர் பெர்னார்தித்தோ அவுசா பேராயர் பெர்னார்தித்தோ அவுசா  

அனைவருக்கும் சமமான பாதுகாப்பும், சமமான வாய்ப்புக்களும்

பாதுகாப்பும், வாய்ப்புக்களும் இல்லாதச் சூழலில், பாதிக்கப்பட்டோர், பல்வேறு சுரண்டல்களுக்கு உள்ளாகின்றனர், இந்த நிலை, மனித வர்க்கத்தையும் நவீன அடிமைத்தனத்தையும் வளர்க்கிறது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சமுதாயப் பாதுகாப்பும், பொதுவான சேவைகள் அனைவருக்கும் கிடைக்கும் வழிமுறைகளும், உறுதி செய்யப்படவில்லையெனில், ஒருங்கிணைந்த மனித முன்னேற்றம் உருவாகாது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. அவையில் கூறினார்.

"மனித வர்க்கத்திற்கும், நவீன அடிமைத்தனத்திற்கும் எதிரான போராட்டத்தில், சமுதாயப் பாதுகாப்பும், அனைவருக்கும் பொதுவான சேவைகள் கிடைப்பதும்" என்ற தலைப்பில், ஐ.நா. தலைமையகத்தில், திருப்பீடமும், Arise Foundation என்ற அறக்கட்டளையும் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் வரவேற்புரை வழங்கிய பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள் இவ்வாறு கூறினார்.

பாதுகாப்பும், அனைவருக்கும் சமமாகக் கிடைக்கக்கூடிய சேவைகளும் இன்றி, பொருளாதாரத்தையும், தொழில்நுட்பத்தையும் மட்டுமே சார்ந்து மேற்கொள்ளப்படும் முன்னேற்றங்கள், மனித குலத்திற்கு பயனளிக்காது என்று பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.

வறியோர் மற்றும், பாதிக்கப்பட்டோர் ஆகியோரை உள்ளடக்கிய சமுதாயத்தில், அனைவருக்கும் சமமான பாதுகாப்பும், சமமான வாய்ப்புக்களும் வழங்கப்படவேண்டும் என்று, 2030ம் ஆண்டுக்குள் நாம் அடையவேண்டிய நீடித்திருக்கக்கூடிய முன்னேற்ற இலக்குகள் என்ற அறிக்கையில் கூறப்பட்டிருப்பதை, பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய பாதுகாப்பும், வாய்ப்புக்களும் இல்லாத சூழலில், பாதிக்கப்பட்டோர் பல்வேறு சுரண்டல்களுக்கு உள்ளாகின்றனர் என்பதும், இந்நிலை, மனித வர்க்கத்தையும் நவீன அடிமைத்தனத்தையும் வளர்க்கிறது என்பதும் தெளிவாகிறது என்று பேராயர் அவுசா அவர்கள் எடுத்துரைத்தார்.

மனித வர்த்தகத்திற்கு எதிராகப் போராடுவது, திருப்பீடத்தின் முக்கியமான பணிகளில் ஒன்று என்பதை தன் வரவேற்புரையில் சுட்டிக்காட்டிய பேராயர் அவுசா அவர்கள், தன் உரையைத் தொடர்ந்து நடைபெறும் அமர்வில் திருப்பீடத்திலிருந்தும், Arise Foundation அறக்கட்டளையிலிருந்தும் பேசவிருப்போரை அறிமுகம் செய்து வைத்தார்.

14 March 2019, 15:33