தேடுதல்

Vatican News
ஐ.நா. பாதுகாப்பு அவையில் திருப்பீடப் பிரதிநிதியாக பேராயர் அவுசா ஐ.நா. பாதுகாப்பு அவையில் திருப்பீடப் பிரதிநிதியாக பேராயர் அவுசா 

மக்களனைவரும் அச்சத்தின் பிடியிலேயே வாழவேண்டிய நிலை

சட்டத்திற்குப் புறம்பான பணப் பரிமாற்றங்கள், மனித வியாபாரம், பழங்காலக் கலைபொருள்களை சட்டத்திற்கு புறம்பே விற்பனை செய்தல், ஆயுத விற்பனை போன்றவற்றைத் தடை செய்யும் தீர்மானங்கள் நடைமுறைக்கு வர வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பயங்கரவாதத்தால் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுவரும் இன்றைய சூழலில், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி கிடைக்கும் வழிகளை எதிர்த்து போராட வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தினார், பேராயர் பெர்னார்தித்தோ அவுசா.

'பயங்கரவாத நடவடிக்கையால் அனைத்துலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் – பயங்கரவாதத்தை வளர்க்கும் நிதியுதவியை எதிர்த்து செயல்படல்' என்ற தலைப்பில் ஐக்கிய நாட்டு நிறுவனத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய திருப்பீடப் பிரதிநிதி பேராயர் அவுசா அவர்கள், தன் உரையின் துவக்கத்தில், நியூசிலாந்தில் அண்மையில் இடம்பெற்ற இரு மசூதி தாக்குதல்களில் உயிரிழந்தவர்கள் குறித்து தன் ஆழந்த அனுதாபங்களை வெளியிட்டார்.

இன்றைய உலகில் தீவிரவாத கொளகைகளின் காரணமாக உருவாகும் வன்முறை நடவடிக்கைகளால் மக்களனைவரும் தொடர்ந்து அச்சத்தின் பிடியிலேயே வாழவேண்டிய ஒரு நிலை உருவாகியுள்ளது என்ற கவலையை வெளியிட்ட பேராயர் அவுசா அவர்கள், அமைதியை உருவாக்குவோர், மனிதாபிமான மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் ஆகியோரையும், பொதுமக்கள் கூடுமிடங்களையும், வழிபாட்டு தலங்களையும் குறி வைத்தே இன்றைய வன்முறை தாக்குதல்கள் இடம்பெறுகின்றன என்பதையும் சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாதிகளுக்குக் கிடைக்கும் நிதியுதவி, மற்றும், ஆயுதங்கள் வழங்குதல், பயங்கரவாதத்தை ஊக்குவித்தல், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலமளித்தல், போன்ற நடவடிக்கைகள் தடைச் செய்யப்பட்ட வேண்டும் எனவும், பேராயர் அவுசா அவர்கள், தன் உரையில் விண்ணப்பித்தார்.

பயங்கரவாத நடவடிக்கைகளை நியாயப்படுத்த முனையும் முயற்சிகள் முற்றிலுமாகத் தடுக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்ட பேராயர் அவுசா அவர்கள், சட்டத்திற்குப் புறம்பான பணப் பரிமாற்றங்கள், மனித வியாபாரம், பழங்காலக் கலைபொருள்களை சட்டத்திற்கு புறம்பே விற்பனை செய்தல், ஆயுத விற்பனை போன்றவற்றைத் தடை செய்யும் நோக்கத்தில், ஐ.நா. பாதுகாப்பு அவையால் இதுவரை எடுக்கப்பட்டுவந்த அனைத்து தீர்மானங்களும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்பதையும் தன் உரையில் வலியுறுத்தினார்.

29 March 2019, 14:33