பேராயர் பெர்னார்தித்தோ அவுசா பேராயர் பெர்னார்தித்தோ அவுசா 

பெண்களின் முன்னேற்றம் பற்றி ஐ.நா.வில் திருப்பீட பிரதிநிதி

பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் வாழ்வை மேம்படுத்துதல் என்ற தலைப்பில், ஐ.நா. தலைமையகத்தில், மார்ச் 11ம் தேதியிலிருந்து நடைபெற்றுவரும் 63வது அமர்வு, 22ம் தேதி வரை நடைபெறும்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

பொதுநலப் பணிகள், சமுதாய பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் நீடித்த நிலையான உள்கட்டமைப்புகளில், பெண்கள் ஈடுபடுவதற்கு வாய்ப்புகளை அதிகரிப்பதன் வழியாக, அவர்களின் தனிப்பட்ட வாழ்வு, அவர்களின் குடும்பங்கள் மற்றும் சமுதாயங்களின் நிலைகளை முன்னேற்ற முடியும் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. அவையில் கூறினார்.

பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் வாழ்வை மேம்படுத்துதல் என்ற தலைப்பில், ஐ.நா. தலைமையகத்தில், மார்ச் 11ம் தேதியிலிருந்து நடைபெற்றுவரும் 63வது அமர்வில் உரை வழங்கிய பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள் இவ்வாறு கூறினார்.

உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கும் பெண்கள், குடும்பங்களில், குழந்தைகள், நோயாளர் மற்றும் வயது முதிர்ந்தோரைப் பராமரிப்பது போன்ற ஊதியமற்ற தொழில், சமுதாய கட்டமைப்பிற்குப் பெரிதும் உதவுகின்றது என்பதைச் சுட்டிக்காட்டினார், பேராயர் அவுசா

சமுதாயநலன் பாதுகாப்புத் திட்டங்களில் பெண்களுக்குரிய பங்கு வழங்கப்படுவது அவசியம் என்றுரைத்த பேராயர் அவுசா அவர்கள், இந்த திட்டங்களின்றி, தொடர்ந்து பாகுபாடுகள் மற்றும் சமுதாய அநீதிகளை, பெண்கள் எதிர்கொள்வார்கள் என்றும் எச்சரித்தார். பெண்கள் மட்டுமே உலகிற்கு வழங்கக்கூடிய தனித்துவமிக்க மற்றும் முக்கிய கொடைகள் பற்றி திருத்தந்தையர் தொடர்ந்து வலியுறுத்தி வருவது பற்றி தன் உரையில் குறிப்பிட்ட பேராயர் அவுசா அவர்கள், இக்கொடைகள் வழியாக, பெண்கள், உலகின் புரிதலை வளப்படுத்தி, உண்மையான மனித உறவுகளை மேலும் வளர்ப்பதற்கு உதவுவார்கள் என்று கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 March 2019, 15:02