தேடுதல்

"திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு"  கூட்டத்தில் கர்தினால் தாக்லே "திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு" கூட்டத்தில் கர்தினால் தாக்லே 

"காயங்களை ஆற்றுவது, மேய்ப்பர்கள் பணியின் இதயம்"

இயேசு, தோமாவுக்குத் தோன்றி, தன் காயங்களைக் காட்டி, அவற்றைத் தொடுவதற்கு அழைப்பு விடுத்த காட்சியைச் சிந்திக்க, கர்தினால் தாக்லே அவர்கள் அழைப்பு விடுத்தார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இறைவனால் அருள்பொழிவு பெற்ற பணியாளர்கள், சிறியோரை தவறான முறையில் பயன்படுத்தியதால் ஏற்பட்ட காயம், சிறியோரின் குடும்பங்கள், அருள்பணியாளர்கள், ஆயர்கள், திருஅவை, சமுதாயம் என்ற அனைத்து நிலைகளிலும் காயங்களை உருவாக்கியுள்ளன என்று மணிலா பேராயர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், இவ்வியாழன் காலையில் வத்திக்கானில் வழங்கிய உரையில் கூறினார்.

'திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு' என்ற மையக்கருத்துடன், வத்திக்கானில் இவ்வியாழனன்று துவங்கியுள்ள ஒரு முக்கியக் கூட்டத்தில், "ஆடுகளின் மணம். அவர்களின் வேதனையை அறிந்து, அவர்கள் காயங்களை ஆற்றுவது, மேய்ப்பர்கள் பணியின் இதயம்" என்ற தலைப்பில், கர்தினால் தாக்லே அவர்கள் வழங்கிய முதல் உரையில் இவ்வாறு கூறினார்.

தன் காயங்களைக் காணவும் தொடவும் அழைத்த இயேசு

பாலியல் முறைகேடுகள் என்ற காயத்தைக் குறித்து சிந்திக்கும் வேளையில், இயேசு தன் சீடர்கள் நடுவே, குறிப்பாக, தோமாவுக்குத் தோன்றி (யோவான் 20:19-28), தன் காயங்களைக் காட்டி, அவற்றைத் தொடுவதற்கு அழைப்பு விடுத்த காட்சியைச் சிந்திக்க, கர்தினால் தாக்லே அவர்கள் அழைப்பு விடுத்தார்.

இயேசுவின் காயங்களைக் காணவும், தொடவும் அழைப்பு பெற்ற தோமா, அந்தக் காயங்களைக் கண்டதும், "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!" என்ற நம்பிக்கை அறிக்கையை வெளியிட்டார் என்பதை தன் உரையில் சுட்டிக்காட்டிய கர்தினால் தாக்லே அவர்கள், இறைவனின் காயங்களையும், மனித குலத்தின் காயங்களையும் தொடக்கூடியவரே, இயேசுவின் உயிர்ப்பை நம்பிக்கையுடன் அறிவிக்க முடியும் என்று கூறினார்.

காயங்கள் குணமாக்கப்படவேண்டும்

எந்த ஒரு காயமும் குணமாக்கப்படவேண்டும் என்பதை, தன் உரையில் தெளிவுபடுத்திய கர்தினால் தாக்லே அவர்கள், குணமாக்கும் முயற்சியில், முதலாவதாக, அந்தக் காயங்களை நான் அணுகிச் செல்லவேண்டும் என்றும், அப்படி அணுகிச் செல்வதால், நாமும் காயப்படுவோம் என்பதை உணர்ந்தாலும், அஞ்சாமல் மனித குலத்தின் காயங்களை நாம் அணுகிச் செல்லவேண்டும் என்றும் வலியுறுத்திக் கூறினார்.

சிறியோருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் என்ற காயத்தைப் பொருத்தவரை, திருஅவை தலைவர்கள், இக்காயத்திலிருந்து விலகிச் சென்றுள்ளனர் என்பதை, தன் உரையில் எடுத்துரைத்த கர்தினால் தாக்லே அவர்கள், இவ்வாறு விலகிச் சென்றதால், இக்கொடுமையின் காயங்கள் தற்போது, திருஅவையை பெருமளவு வேதனையில் ஆழ்த்தியுள்ளது என்று கூறினார்.

காயமுற்றவர்களுடன் இணைந்து நடப்பது

காயமுற்றவர்களுடன் இணைந்து நடப்பது, திருஅவையின் தலைவர்களுக்கு முன் உள்ள ஒரு முக்கியமான கடமை என்றும், இவ்வாறு இணைந்து நடக்கும்போது, காயமுற்ற சிறியோர், தன்னைக் காயப்படுத்தியவர்களை மன்னிக்கக்கூடிய ஒரு மனநிலையை அடைவார்களானால் அது நமக்கு வழங்கப்படும் அருள் நிறைந்த மாபெரும் தருணம் என்றும், கர்தினால் தாக்லே அவர்கள், தன் உரையில் கூறினார்.

தன் காயங்களைக் காணவும், தொடவும் தன் சீடர்களை அழைத்த இயேசுவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, பாலியல் கொடுமைகளால் காயமுற்றோர், அவர்களது குடும்பங்கள், இந்த முறைகேடுகளை உருவாக்கிய அருள்பணியாளர்கள், மற்றும் இந்த கொடுமையால் இழிவுகளைச் சந்தித்துள்ள திருஅவை, சமுதாயம் அனைவரிலும் காணப்படும் காயங்களைத் தொடவும், அவற்றைக் குணமாக்கவும் இறைவன் நமக்குத் துணை புரியட்டும் என்ற வேண்டுதலுடன் கர்தினால் தாக்லே அவர்கள் தன் உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 February 2019, 15:15