தேடுதல்

Vatican News
பேராயர் பெர்னார்தித்தோ அவுசா பேராயர் பெர்னார்தித்தோ அவுசா 

வறியோருக்கும், செல்வருக்கும் உள்ள இடைவெளி மிக அதிகமாகிறது

மனிதர்களை மையப்படுத்தாமல், வர்த்தகத்தையும், இலாபத்தையும் மையப்படுத்தும் முன்னேற்றங்கள், உண்மையான சமுதாய முன்னேற்றம் அல்ல - பேராயர் அவுசா

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலகெங்கும் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளில், வறியோருக்கும், செல்வருக்கும் இடையே உள்ள இடைவெளி மிக அதிகமாகி வருகிறது என்பது தெளிவாகிறது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. அவையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கூறினார்.

ஐ.நா. அவையின் சமுதாய முன்னேற்ற துறையின் 57வது அமர்வு, பிப்ரவரி 11, இத்திங்கள் முதல் 21 வருகிற வியாழன் முடிய நடைபெற்று வரும் வேளையில், இக்கூட்டங்களில் திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், தொழிலாளிகளுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் சமுதாயப் பாதுகாப்பு திட்டங்கள் மிக மோசமான நிலையில் இருப்பதை எடுத்துரைத்தார்.

நமது எதிர்காலமான இளையோர் மீது தனி அக்கறை கொண்டு, அவர்களை வளர்ப்பதில் தீவிர முயற்சிகளும், பெரும் முதலீடுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரைகளில் கூறி வருவதை, பேராயர் அவுசா அவர்கள் குறிப்பிட்டுப் பேசினார்.

சமுதாயப் பாதுகாப்பு என்பதைச் சிந்திக்கும்போது, குடும்பங்களின் பாதுகாப்பு குறித்து இன்னும் தீவிரமான முயற்சிகளை அரசுகள் மேற்கொள்ளவேண்டும் என்பதையும், குறிப்பாக, குழந்தைகளின் முழுமையான பாதுகாப்பிற்கு அரசுகள் உறுதியளிக்க வேண்டும் என்பதையும் பேராயர் அவுசா அவர்கள் வலியுறுத்தினார்.

மனிதர்களை மையப்படுத்தாமல், வர்த்தகத்தையும், இலாபத்தையும் மையப்படுத்தும் முன்னேற்றங்கள், உண்மையான சமுதாய முன்னேற்றம் அல்ல என்பதை, திருப்பீடப் பிரதிநிதி பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

15 February 2019, 14:20