"திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு" கூட்டம் "திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு" கூட்டம் 

"திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு" கூட்டத்தின் நிறைவு

சிறியோரைப் பாதுகாப்பதற்கும், சிறியோர்க்கெதிரான பாலியல் முறைகேடுகளுக்கு எதிராகச் செயல்படுவதற்கும் திருஅவையில் திட்டவட்டமான நடைமுறைகள்

மேரி தெரேசா - வத்திக்கான்

“நீங்கள் எதைச் செய்தாலும், உங்கள் உள்ளத்திற்கும் உலகத்திற்கும் உண்மையாகவே நடந்துகொள்ளுங்கள்” என்று சொன்னார் மகாத்மா காந்தி. பொதுநிலை விசுவாசிகள், திருஅவையின் திருப்பணியாளர்களிடமிருந்து எதிர்பார்ப்பது இதுதான். திருஅவையில் சில அருள்பணியாளர்கள் மற்றும் ஆயர்களின் பாலியல் முறைகேடுகள், பல இடங்களில் திருஅவையின் நம்பகத்தன்மையைக் குறைத்துள்ளன என்று பரவலாக உணரப்படும்வேளை, இப்பிரச்சனைகள் பற்றி உலகளாவியத் திருஅவையின் கருத்துக்களை அறிந்து, அதற்குப் பிராயச்சித்தம் தேடி, திருஅவைக்குப் புத்துயிர் ஊட்டும் நோக்கத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 21, கடந்த வியாழன் முதல், பிப்ரவரி 24 இஞ்ஞாயிறு முடிய, வத்திக்கானில் "திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு" என்ற ஒரு முக்கியமான கூட்டத்தை கூட்டினார். இக்கூட்டத்தில், உலகெங்கிலும் உள்ள 114 ஆயர் பேரவைகளின் தலைவர்களில், 18 பேர் ஆசியாவிலிருந்தும், 36 பேர் ஆப்ரிக்காவிலிருந்தும் 32 பேர் ஐரோப்பாவிலிருந்தும், 24 பேர் வட, மற்றும், தென் அமெரிக்காவிலிருந்தும் 4 பேர் ஓசியானாவிலிருந்தும் கலந்துகொண்டனர். இவர்கள் தவிர, ஆண் துறவு சபைகளின் 12 உலகத் தலைவர்கள், பெண் துறவு சபைகளின் 10 உலகத் தலைவர்கள், திருப்பீடத்தின் உயர் அதிகாரிகள் 14 பேர், மற்றும் திருத்தந்தையால் சிறப்பான அழைப்பு பெற்றோர் என, 190 பேர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவருடனும் இணைந்து, இஞ்ஞாயிறு காலை 9.30 மணிக்கு, வத்திக்கானின் ரெஜ்ஜியா அறையில் கூட்டுத் திருப்பலி நிறைவேற்றி, இக்கூட்டத்தை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ். இத்திருப்பலியின் இறுதியில் திருத்தந்தை ஆற்றிய நீண்ட மற்றும் முக்கிய உரை, இந்த நான்கு நாள் கூட்டத்திற்கு முத்தாய்ப்பாக அமைந்தது. அருள்பணியாளர்களின் பாலியல் முறைகேடுகள் ஏற்படுத்தியுள்ள காயங்கள், சிறியோர்க்கெதிரான பாலியல் முறைகேடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல், பாலியல் மற்றும் ஏனைய முறைகேடுகளிலிருந்து சிறியோரைப் பாதுகாத்தல் போன்றவை பற்றி திருத்தந்தை எடுத்துரைத்தார். மேலும், இந்த நான்கு நாள் கூட்டத்தில், சிறியோரைப் பாதுகாப்பதற்கும், சிறியோர்க்கெதிரான பாலியல் முறைகேடுகளுக்கு எதிராகச் செயல்படுவதற்கும்,  திட்டவட்டமான நடைமுறைகள் அறிவிக்கப்பட்டன என்று, இக்கூட்டம் பற்றி, பிப்ரவரி 24, இஞ்ஞாயிறன்று, திருப்பீட செய்தியாளர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. வத்திக்கான் நாட்டிற்குள் சிறியோரையும், நலிந்தோரையும் பாதுகாப்பதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் சொந்த விருப்பத்தினால் வெளியிடும் அறிக்கை வழியாக விதிமுறைகளை விரைவில் வெளியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.      

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 February 2019, 15:44