தேடுதல்

திருஅவை அதிகாரிகளுடன் அருள்சகோதரி Veronica Openibo திருஅவை அதிகாரிகளுடன் அருள்சகோதரி Veronica Openibo 

திறந்தமனம், ஒளிவுமறைவற்ற நிலை திருஅவைக்கு தேவை

திருஅவையில் பாலியல் முறைகேடுகள் குறித்த பிரச்சனையை அகற்றும் பாதையில் முன்னோக்கிச் செல்வதற்கு, திறந்தமனநிலையும், ஒளிவுமறைவற்ற நிலையும் தேவைப்படுகின்றன

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

"திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு" என்ற கூட்டத்தின் மூன்றாவது நாளாகிய பிப்ரவரி 23, இச்சனிக்கிழமை காலை ஒன்பது மணிக்கு, நைஜீரிய நாட்டு அருள்சகோதரி Veronica Openibo அவர்கள் வழங்கும் "திறந்த மனநிலை: உலகிற்கு அனுப்பப்படுதல்" என்ற தலைப்பில், உரையாற்றினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிரசன்னத்தில் துவங்கிய இந்த அமர்வில், குழந்தை இயேசு சபையின் தலைவரான அருள்சகோதரி Veronica Openibo அவர்கள் ஆற்றிய உரையில், பாலியல் முறைகேடுகள் குறித்த புகார்களில் திருஅவையின் மௌன கலாச்சாரம் பற்றி கவலை தெரிவித்தார்.

திருஅவையில், பாலியல் முறைகேடுகள் குறித்த பிரச்சனை, திருஅவையின் நம்பகத்தன்மையைக் குறைத்துள்ளன என்றும், இப்பிரச்சனை, கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளவேளை, இளையோர் மற்றும் நலிந்தோரைப் பாதுகாப்பதற்கு, திருஅவை அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார், அருள்சகோதரி Openibo.

இந்த முயற்சியானது, அச்சம் அல்லது அவமானமாகக் கருதப்படாமல், ஒருங்கமைவு மற்றும் நீதிக்கான திருஅவையின் மறைப்பணியாக நோக்கப்பட வேண்டும் என்றும், அச்சகோதரி கூறினார்.

சிறியோரை பாலியல் முறைகேடுகளுக்கு உள்ளாக்கி, ஓய்வூதியத்துடனும், சில இடங்களில் நற்பெயருடனும், அமைதியாக பணி ஓய்வுபெறுவதற்கு மூத்த அருள்பணியாளர்கள் அனுமதிக்கப்படுவது பற்றி குறை கூறிய அருள்சகோதரி Openibo அவர்கள், அருள்பணியாளர்கள் அடிக்கடி உயர்த்தி வைக்கப்படுகின்றனர் என்றும் உரைத்தார். 

தவறுகள் செய்யும் அச்சத்தின் காரணமாக, இத்தகைய குற்றங்களை, இனிமேல் மறைத்து வைக்காமல் இருப்போம் எனக் கேட்டுக்கொண்ட அச்சகோதரி, நைஜீரியாவில், பாலியல் கல்விப் பணியாற்றியவேளையில், இத்தகைய குற்றங்கள் பற்றி அறிய முடிந்தது எனவும் தெரிவித்தார்.

இந்த முறைகேடுகள் புயல்களை எழுப்பும்வரை மௌனமாக இருப்பதற்கு நாம் அடிக்கடி விரும்புகிறோம், இத்தகைய குற்றங்களைச் செய்யும் அருள்பணியாளர்கள் மீது சகிப்புத்தன்மை காட்டப்படவே கூடாது என்றும், அச்சகோதரி வலியுறுத்தினார்.  

"திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு" என்ற கூட்டத்தில் உரையாற்றிய மூன்று பெண்களில் அருள்சகோதரி Veronica Openibo அவர்களும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 February 2019, 14:55