தேடுதல்

Vatican News
"திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு" என்ற கூட்டத்தின் மூன்றாம் நாள் அமர்வு "திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு" என்ற கூட்டத்தின் மூன்றாம் நாள் அமர்வு  (Vatican Media)

"திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு" கூட்டம், 3ம் நாள்

ஆண்டவரே, குற்றங்களை மறுக்கும் மற்றும் அநீதியை மறைக்கும் சோதனையிலிருந்து எம்மைக் காப்பாற்றும். நற்செய்தியின் ஒளியை, மங்கச்செய்யும் செயல்களுக்கு எம்மைக் கையளிக்காமல், புதிதாக வாழ்வைத் தொடங்க சக்தியளித்தருளும்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

"திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு" என்ற கூட்டத்தின் மூன்றாம் நாள் அமர்வுகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிரசன்னத்தில், பிப்ரவரி 23, இச்சனிக்கிழமை காலை ஒன்பது மணிக்கு, செபத்துடன் துவங்கின.

அன்பு கொண்டு வாழுங்கள்.., ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள், ஏனெனில், ஒளியே எல்லா நன்மையையும் நீதியையும் உண்மையையும் விளைவிக்கிறது. ஆண்டவருக்கு உகந்தது எது என்பதை ஆராய்ந்து பாருங்கள். பயனற்ற இருளின் செயல்களைச் செய்கிறவர்களோடு உங்களுக்கு உறவு வேண்டாம். அவை குற்றமென எடுத்துக்காட்டுங்கள் என, புனித பவுல் எபேசியருக்கு எழுதிய திருமடல் பிரிவு ஐந்தில் (எபேசி.5,1-11) விண்ணப்பிக்கும் பகுதி முதலில் வாசிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவரின் சாட்சியம்

இச்செபத்தில், பாலியல் முறைகேட்டால் பாதிக்கப்பட்ட ஒருவர், தனது சாட்சியத்தை வழங்கினார். அரண்மனையின் வாயில்களின் முன்னர், நான் ஒரு பிச்சைக்காரர் போல் உணர்கிறேன், உண்மை, நீதி மற்றும் ஒளியின் பிச்சைக்காரராக நிற்கும் நான், சிறிதளவு தகவலையே பெற்றேன், அவர்கள், தங்களின் மாண்பை சுவர்களுக்குள் மறைத்துக்கொள்வதாக உணர்ந்தேன், உண்மை மற்றும் ஒளியின் திருப்பணியாளர்களாக இருக்க வேண்டியவர்கள், இருளில் மறைந்து கொள்கின்றனர், இது என்னை வேதனைப்படுத்துகின்றது, நான் பாதிக்கப்பட்டவர்.. இவ்வாறு, அவர் சாட்சியம் வழங்கினார்.

குற்றங்களை மறுக்கும் சோதனையிலிருந்து..

இச்சாட்சியத்திற்குப் பின்னர், அவையில் நீண்ட அமைதி நிலவியது. அதன்பின்னர் இடம்பெற்ற இறுதி செபத்தில், தூயவரான கடவுளே, தூய வாழ்வு வாழ நீர் எம்மை அழைத்திருக்கிறீர், உமது உண்மையின் சாட்சிகளாக வாழும் மனிதர்களாக நீர் எம்மை அனுப்புகிறீர், நற்செய்தியின் ஒளியில் நீர் எம்மை ஒளிரச் செய்திருக்கிறீர், உண்மையை அறிவிப்பதற்குத் துணிச்சலையும், எம் பொறுப்புணர்வை அறிவிப்பதற்கு சுதந்திரத்தையும் எமக்குத் தந்தருளும். ஆண்டவரே, குற்றங்களை மறுக்கும் மற்றும் அநீதியை மறைக்கும் சோதனையிலிருந்து எம்மைக் காப்பாற்றும். நற்செய்தியின் ஒளியை, பாவமும், குற்றப்பழி உணர்வும் மங்கச்செய்வதற்கு எம்மைக் கையளிக்காமல், புதிதாக வாழ்வைத் தொடங்க சக்தியளித்தருளும் என்று செபிக்கப்பட்டது.

‘ஒளிவுமறைவற்ற நிலை’ என்பதை மையப்படுத்தி நடைபெற்ற இந்த மூன்றாம் நாள் காலையில், அருள்சகோதரி Veronica Openibo அவர்கள், கர்தினால் Reinhard Marx அவர்கள் ஆகிய இருவரும் உரையாற்றினர். மாலை நான்கு மணிக்கு, மெக்சிகோ நாட்டு செய்தியாளர் Valentina Alazraki அவர்கள் "அனைத்து மக்களோடும் தொடர்பு" என்ற தலைப்பில் வழங்கும் உரையைத் தொடர்ந்து பாவ மன்னிப்பு செப வழிபாடு, பாலியல் முறைகேட்டால் பாதிக்கப்பட்ட ஒருவரின் சாட்சியம் போன்றவை இடம்பெறுகின்றன. இஞ்ஞாயிறு காலை 9.30 மணிக்கு Regia அறையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றும் திருப்பலியோடு, "திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு" என்ற இக்கூட்டம் நிறைவடையும்.  

23 February 2019, 14:50