தேடுதல்

கர்தினால் Blase Joseph Cupich கர்தினால் Blase Joseph Cupich  

"அனைவரும் இணைந்து பொறுப்பேற்றல்" என்ற தலைப்பில் கர்தினால் Cupich

திருஅவை முழுவதிலும் இடம்பெறும் தெளிந்துதேர்தல் மற்றும் சீர்திருத்தத்தில், பங்குத்தளங்கள், மறைமாவட்டங்கள், தேசிய மற்றும் மாநில திருஅவை குழுக்கள் ஆகிய எல்லாவற்றிலும், திருமுழுக்குப்பெற்ற அனைவரின் பங்கேற்பு தேவை

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

"திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு" என்ற தலைப்பில், பிப்ரவரி 22, இவ்வெள்ளி காலை ஒன்பது மணிக்குத் துவங்கிய அமர்வில், இரண்டாவதாக, காலை பத்து மணிக்கு உரையாற்றிய, கர்தினால் Blase Joseph Cupich அவர்கள், திருஅவையின் ஒருங்கிணைந்த நிலையின் ஒளியில் நிலவும் சவாலை ஆயர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

திருத்தந்தையின் பிரசன்னத்தில் இடம்பெற்ற இந்த அமர்வில், "அனைவரும் இணைந்து பொறுப்பேற்றல்" என்ற தலைப்பில் உரையாற்றிய, சிக்காகோ பேராயர், கர்தினால் Cupich அவர்கள், உலகளாவிய திருஅவையின் அமைப்பு முறை, சட்ட மற்றும் நிர்வாக முறையை, நாம் ஒருவருக்கொருவர் பொறுப்பானவர்கள் என்ற கோணத்தில் அலசும்போது உண்டாகும் சவாலையும் ஆயர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

ஒருங்கிணைந்த நிலை

திருஅவையில் அனைவரின் ஒருங்கிணைந்த நிலை பற்றி விளக்கிய, கர்தினால் Cupich அவர்கள், திருஅவை முழுவதிலும் இடம்பெறும் தெளிந்துதேர்தல் மற்றும் சீர்திருத்தத்தில், பங்குத்தளங்கள், மறைமாவட்டங்கள், தேசிய மற்றும் மாநில திருஅவை குழுக்கள் ஆகிய எல்லாவற்றிலும் திருமுழுக்குப்பெற்ற அனைவரின் பங்கேற்பை, ஒருங்கிணைந்த நிலை குறிக்கின்றது என்று கூறினார்.

இந்தக் காலத்தில், ஒருங்கிணைந்த நிலை, திருஅவைக்கு மிகவும் இன்றியமையாதது என்று உரைத்த கர்தினால் Cupich அவர்கள், உண்மை, பிராயச்சித்தம் மற்றும் கலாச்சாரங்களின் புதுப்பித்தல் ஆகிய கூறுகளுக்கும், திருஅவைக்குள்ளும், பரந்துபட்ட சமுதாயத்திலும் இளமையைக் காப்பதற்கு நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள பணியை நிறைவேற்றுவதற்கும், ஒருங்கிணைந்த நிலை உதவும் என உரையாற்றினார்.

திருஅவை முழுவதின் மனமாற்றத்திற்கும், ஒவ்வொரு கண்டத்திலும் திருஅவையின் கலாச்சார மனமாற்றத்திற்கும் அழைப்பு விடுத்த கர்தினால் Cupich அவர்கள், எல்லா நிலைகளிலும், தெளிந்துதேர்தல், மனமாற்றம் மற்றும் சீர்திருத்தத்தில் வேரூன்றப்பட்ட, அனைவரும் ஒருங்கிணைந்து நோக்கும் பார்வை, சிறியோரின் பாதுகாப்புக்கு திருஅவை எடுக்கும் செயல்களுக்கு உதவும் என்றும் உரைத்தார்.

புனிதப் பிணைப்பு

திருஅவையில் சட்ட மற்றும் நிர்வாக முறை சீர்திருத்தத்தின் அவசியம் குறித்தும் பல கருத்துக்களைப் பரிந்துரைத்த சிக்காகோ பேராயரான கர்தினால் Cupich அவர்கள், பொதுநிலையினரின் பங்கு, பாதிக்கப்பட்டவருக்குச் செவிசாய்த்து, உடன்நடத்தல், அன்புகூரும் அன்னையாக, திருஅவையின் பங்கு, திருஅவைக்கும், அதன் மந்தைக்கும்  இருக்கவேண்டிய புனித பிணைப்பு ஆகியவை பற்றியும் தெரிவித்தார்.

திருஅவைக்கு முன்னர் வைக்கப்பட்டுள்ள பணிகள் மற்றும் கடமைகள் பற்றியும் விளக்கிய கர்தினால் Cupich அவர்கள், கடுமையான குற்றங்கள் புரிந்த ஆயர்கள், முதுபெரும் தந்தையர், துறவு சபைத் தலைவர்கள் போன்ற திருஅவைத் தலைவர்களை, அவர்களின் பணியிலிருந்து விலக்கி வைப்பது, நியாயமானது என்று கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 February 2019, 15:20