தேடுதல்

Vatican News
ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் நேரடிச் செயலர் அருள்பணி மைக்கில் செர்னி ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் நேரடிச் செயலர் அருள்பணி மைக்கில் செர்னி  

பிப்ரவரி 8, மனித வர்த்தகத்திற்கு எதிரான உலக நாள்

உலகின் பல துறைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஊழலைப்போல, மனித வர்த்தகமும், உலகெங்கும் நிறைந்துள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலகின் பல துறைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஊழலைப்போல, மனித வர்த்தகமும், உலகெங்கும் நிறைந்துள்ளது என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர், செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.

மனித வர்த்தகத்திற்கு எதிராக விழிப்புணர்வு மற்றும் செபங்களை மேற்கொள்ளும் உலக நாள், பிப்ரவரி 8, இவ்வெள்ளியன்று கடைபிடிக்கப்படுவதையொட்டி, இவ்வியாழனன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் நேரடிச் செயலர் அருள்பணி மைக்கில் செர்னி அவர்கள், இவ்வாறு கூறினார்.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை, துறவு சபைத் தலைவர்களின் உலக அவை, மற்றும், Talitha Kum என்ற அமைப்பு ஆகிய மூன்றும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இச்செய்தியாளர்கள் கூட்டத்தில், மனித வர்த்தகத்தை ஒழிக்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டிருந்த பிப்ரவரி மாத செபக்கருத்தை உள்ளடக்கிய காணொளிச் செய்தி வெளியிடப்பட்டது.

'The Pope Video' என்ற இந்தக் காணொளிச் செய்தியை ஒவ்வொரு மாதமும் உருவாக்கி வரும் செபத்தின் திருத்தூதுப் பணிக்குழுவின் தலைவர், இயேசு சபை அருள்பணி Frederic Fornos அவர்களும், Talitha Kum அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருள் சகோதரி Gabriella Bottani அவர்களும் செய்தியாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

மனித வர்த்தகம் என்ற கொடுமையால் பெருமளவு பாதிக்கப்படுவது, குழந்தைகள் என்பதால், இக்கொடுமையை இன்னும் அதிகமானோர் உணர்வதற்கு நாம் அனவைருமே முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று, அருள்பணி Fornos அவர்கள் செய்தியாளர்களிடம் விண்ணப்பித்தார்.

மனித வர்த்தகம் மற்றும் நவீன அடிமைத்தனம் ஆகியவற்றை எதிர்ப்போருக்கு பாதுகாவலரான புனித ஜோசப்பின் பக்கித்தா அவர்களின் பரிந்துரையை நாடி எழுப்பப்பட்ட ஒரு வேண்டுதலுடன், செய்தியாளர்கள் கூட்டம் நிறைவுற்றது.

07 February 2019, 14:33