‘திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு’ கூட்டம் குறித்த விவரங்களை வழங்கிய செய்தியாளர்கள் கூட்டம் ‘திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு’ கூட்டம் குறித்த விவரங்களை வழங்கிய செய்தியாளர்கள் கூட்டம் 

‘திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு’ கூட்டம் குறித்த விவரங்கள்

‘திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு’ என்ற தலைப்பில், வத்திக்கானில், பிப்ரவரி 21ம் தேதி துவங்கவிருக்கும் முக்கியமான கூட்டத்தைப் பற்றிய விவரங்கள், செய்தியாளர்கள் கூட்டத்தில் வழங்கப்பட்டது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

‘திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு’ என்ற தலைப்பில், வத்திக்கானில், பிப்ரவரி 21ம் தேதி துவங்கவிருக்கும் முக்கியமான கூட்டத்தைப் பற்றிய விவரங்களை வழங்க பிப்ரவரி 18, இத்திங்கள் காலை செய்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தை ஒருங்கிணைக்கும் குழுவின் தலைவரான கர்தினால் Blase Cupich அவர்களின் தலைமையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், பேராயர் Charles Scicluna, இயேசு சபை அருள் பணியாளர்களான Federico Lombardi, Hans Zollner மற்றும், திருப்பீட செய்தித் தொடர்புத் துறையின் உதவியாளர், அருள்சகோதரி Bernadette Reis ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தை, திருப்பீட செய்தித் தொடர்பாளரான அலெசாந்த்ரோ ஜிசோத்தி அவர்கள் வழிநடத்தினார்.

நடைபெறவிருக்கும் இக்கூட்டத்தின் பல்வேறு அமர்வுகளையும். அவற்றில் பேசவிருப்போரையும் குறித்து அருள்பணி லொம்பார்தி அவர்கள் செய்தியாளர்களுக்கு முதலில் விளக்கிக் கூறினார்.

இதைத் தொடர்ந்து, அருள்பணி Zollner அவர்கள், இக்கூட்டத்திற்காக இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்தும், திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு என்ற கருத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள www.pbc2019.org என்ற வலைத்தளத்தின் பல்வேறு அம்சங்களைக் குறித்தும், செய்தியாளர்களுக்கு விளக்கிக் கூறினார்.

அன்றன்று நடைபெறும் நிகழ்வுகள் குறித்து விவரங்களை வழங்க, பிப்ரவரி 21ம் தேதி முதல், 24ம் தேதி முடிய, ஒவ்வொரு நாளும் செய்தியாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று, செய்தித் தொடர்பாளர் ஜிசோத்தி அவர்கள் கூறினார்.

செய்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட கேள்வி நேரத்தில், அண்மையில் அருள்பணியிலிருந்து விலக்கப்பட்ட முன்னாள் கர்தினால் தியடோர் மெக்காரிக் உட்பட தனிப்பட்டவர்கள் குறித்து கேள்விகள் எழுந்தபோது, நடைபெறவிருக்கும் இக்கூட்டம், சிறியோரின் பாதுகாப்பு என்ற பிரச்சனைக்கு தீர்வுகள் காணும் பரிமாற்றங்களில் ஈடுபடும் என்றும், தனிப்பட்டவர்களின் பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்காது என்றும் விளக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 February 2019, 16:26