தேடுதல்

"திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு" கூட்டம் "திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு" கூட்டம் 

முக்கியமானதை நோக்கி எங்கள் பார்வையைத் திருப்ப..

உலகளாவிய கிராமத்தில் ஒரு பகுதியில் நடைபெறுவது, எல்லாப் பகுதிகளிலும் எதிரொலிக்கின்றது என்பதால், திருஅவையில் பாலியல் முறைகேடுகள் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில், ஆயர்கள் ஒருவர் ஒருவருக்கு உதவ வேண்டும்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

பிப்ரவரி 21 வியாழன் முதல் வத்திக்கானில் நடைபெற்றுவரும், "திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு" என்ற முக்கிய கூட்டத்தையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டரில் எண்ணங்களைப் பதிவுசெய்து வருகிறார்.

பிப்ரவரி 23, இச்சனிக்கிழமையன்று, ஆண்டவரே, வாழ்வில் இன்றியமையாததை நோக்கி எம் பார்வையைத் திருப்பவும், இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை ஒளிவுமறைவற்ற நிலையாக ஆக்குவதற்கு எமக்கு உதவாத அனைத்தையும் எம்மிடமிருந்து தூக்கி எறியவும் உதவி செய்தருளும் என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டரில் வெளியாகின.

பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களைக் கேட்பது

மேலும், இக்கூட்டம் குறித்து வத்திக்கான் செய்திகளுக்கு பேட்டியளித்த, அமெரிக்க ஐக்கிய நாட்டு கர்தினால், Seán Patrick O'Malley அவர்கள், அருள்பணியாளர்களின் பாலியல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களைக் கேட்பது, இப்பிரச்சனைக்கு பதில் சொல்வதில் பொதுநிலையினரின் பங்கின் முக்கியத்துவம் போன்றவற்றைச் சுட்டிக்காட்டினார்.

பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்கள் எப்போதும் மிகுந்த சக்திவாய்ந்தவை என்றும், இப்பிரச்சனையின் கடுமையையும், பாதிக்கப்பட்டவர்களின் வேதனைகளையும் ஆயர்கள் புரிந்துகொள்வது மிக முக்கியம் என்றும் கூறினார், பாஸ்டன் பேராயர், கர்தினால் O'Malley.

இதனாலே, இந்த வத்திக்கான் கூட்டத்திற்குத் தயாரிப்பாக, ஆயர்கள் தங்கள் நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டுமென்று கூறப்பட்டது என்றும், கர்தினால் O'Malley அவர்கள் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 February 2019, 15:13