தேடுதல்

கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் கர்ட் கோக் கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் கர்ட் கோக் 

கத்தோலிக்கத் திருஅவையும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையும்

வாழ்வைப் பாதுகாக்கும் முயற்சிகளில், கத்தோலிக்கத் திருஅவையும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையும் இணைந்து வந்திருப்பது போற்றுதற்குரியது - கர்தினால் கர்ட் கோக்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

வாழ்வைப் பாதுகாக்கும் முயற்சிகளில், கத்தோலிக்கத் திருஅவையும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையும் இணைந்து வந்திருப்பது போற்றுதற்குரியது என்று, கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் கர்ட் கோக் அவர்கள், கூறினார்.

2016ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையின் தலைவரான முதுபெரும்தந்தை கிரில் அவர்களும் இணைந்து, கியூபா நாட்டில் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை நினைவுகூரும் வண்ணம், இவ்வாண்டு, மூன்றாம் முறையாக கத்தோலிக்கத் திருஅவையும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையும் மாஸ்கோவில் ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தன.

இக்கருத்தரங்கில் கலந்துகொண்ட கர்தினால் கோக் அவர்கள், வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவுக்கு அளித்த பேட்டியில், வாழ்வைப் பாதுகாப்பது என்ற முயற்சி, இவ்வுலகில், பல வழிகளில் சவால்களை முன்வைக்கிறது என்று எடுத்துரைத்தார்.

1957ம் ஆண்டு, திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், உரோம் நகரில் கூடியிருந்த 500க்கும் அதிகமான பன்னாட்டு மருத்துவர்களிடம் வாழ்வைப் பாதுகாக்குமாறு விடுத்த அழைப்பைத் தொடர்ந்து, கத்தோலிக்கத் திருஅவை, வாழ்வுக்கு ஆதரவாக மேற்கொண்டுவரும் பல முயற்சிகளை கர்தினால் கோக் அவர்கள் தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

2016ம் ஆண்டு, கத்தோலிக்கத் திருஅவைக்கும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபைக்கும் இடையே உருவான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, வாழ்வை ஆதரிக்கும் முயற்சிகளில் இவ்விரு அமைப்புக்களும் இணைந்து வந்துள்ளன என்று கர்தினால் கோக் எடுத்துரைத்தார்.

2016ம் ஆண்டு நடைபெற்ற ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, 2017ம் ஆண்டு Freiburg நகரிலும், 2018ம் ஆண்டு வியென்னா நகரிலும் கத்தோலிக்கத் திருஅவையும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையும் இணைந்து, வாழ்வுக்கு ஆதரவான கருத்தரங்குகளை நடத்தி வந்துள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 February 2019, 14:31