தேடுதல்

Vatican News
அருள்பணி Chica Arellano அருள்பணி Chica Arellano 

"வாழ்வையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க"

இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும் நாம் விளைவிக்கும் அழிவுகள், வறியோரையும், பழங்குடியினரையும் பெருமளவிலும், நேரடியாகவும் பாதிக்கின்றன

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

படைப்பின் மீது மனிதர்கள் கொண்டிருக்கும் கட்டுக்கடங்காத ஆதிக்கம் நம்மை அழிவுக்கு இட்டுச் செல்லும் என்பதை, பழங்குடியினத்தவர் நமக்குத் தொடர்ந்து நினைவுறுத்தி வருகின்றனர் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் பன்னாட்டு கூட்டம் ஒன்றில் கூறினார்.

IFAD என்றழைக்கப்படும், ‘வேளாண்மை முன்னேற்றத்தில் பன்னாட்டு நிதி’ என்ற அமைப்பு, பிப்ரவரி 13, இப்புதனன்று நடத்தும் ஒரு பன்னாட்டு கருத்தரங்கில், திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்ற அருள்பணி Chica Arellano அவர்கள், "வாழ்வையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க" என்ற தலைப்பில் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

உணவு மற்றும் வேளாண்மை உலக நிறுவனமான FAOவில் நடைபெறும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் அருள்பணி Arellano அவர்கள், பழங்குடியின மக்களின் நான்காவது உலக மாநாட்டில் வழங்கிய உரையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பழங்குடியினர் மீது காட்டிவரும் அக்கறையைக் குறித்துப் பேசினார்.

சுற்றுச்சூழல் மீது மனிதர்கள் கொண்டுள்ள கட்டுக்கடங்காத ஆதிக்கம், இயற்கையை பெருமளவு சிதைத்துள்ளது என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் "இறைவா உமக்கே புகழ்" என்ற திருமடலில் கூறியுள்ளதை, அருள்பணி Arellano அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும் நாம் விளைவிக்கும் அழிவுகள், வறியோரையும், பழங்குடியினரையும், பெருமளவிலும், நேரடியாகவும் பாதிக்கின்றன என்ற கவலையை அருள்பணி Arellano அவர்கள், தன் உரையில் எடுத்துரைத்தார்.

13 February 2019, 14:13