தேடுதல்

பேராயர் ஈவான் யுர்க்கோவிச் பேராயர் ஈவான் யுர்க்கோவிச் 

"அந்நியரை வரவேற்றல்" திருப்பீடத்திற்கு மிகவும் முக்கியம்

புலம்பெயர்தல், மற்றும் குடிபெயர்தல் பிரச்சனைகளில், அன்னியரைக் கண்டு அச்சம் கொள்வதே, அவர்களை வரவேற்பதற்கு பெரும் தடையாக உள்ளது - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"அந்நியரை வரவேற்றல்" என்ற மையக்கருத்துடன், ஜெனீவாவில் நடைபெறும் பல்சமய உரையாடல் அமர்வில், பிப்ரவரி 12, இச்செவ்வாயன்று உரை வழங்கிய பேராயர் ஈவான் யுர்க்கோவிச் அவர்கள், இந்த மையக்கருத்து, திருப்பீடத்திற்கு மிகவும் முக்கியமான ஓர் அம்சம் என்று கூறினார்.

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. அவை கூட்டங்களில் திருப்பீடத்தின் சார்பாகப் பங்கேற்கும் பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், உலகெங்கும் பரவியுள்ள புலம்பெயர்தல், மற்றும் குடிபெயர்தல் பிரச்சனைகளில், அன்னியரைக் கண்டு அச்சம் கொள்வதே, அவர்களை வரவேற்பதற்கு பெரும் தடையாக உள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிய கருத்தை, தன் உரையில் குறிப்பிட்டார்.

பேராயர் யுர்க்கோவிச் அவர்கள் வழங்கிய உரையில், குடிபெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோர், மதச் சிறுபான்மையினர், உலகளாவிய ஒருங்கிணைப்பு என்ற மூன்று கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

குடிபெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோரை எண்ணிக்கைகளாகப் பார்க்காமல், அவர்களை தனி மனிதர்களாகப் பார்க்கப் பழகிக்கொள்ள வேண்டும் என்பதையும், நம்மை பிறர் எவ்வாறு நடத்தவேண்டும் என்று விரும்புகிறோமோ, அதேபோல் மற்றவர்களை நாம் நடத்த வேண்டும் என்பதையும் இப்பிரச்சனையின் முக்கிய விதிமுறைகளாகப் பின்பற்ற வேண்டும் என்று பேராயர் யுர்க்கோவிச் அவர்கள் கூறினார்.

தங்கள் நாடுகளைவிட்டு வெளியேறும் கட்டாயத்தில் உள்ளோரை வரவேற்பது மட்டும் போதாது, மாறாக, அவர்கள் தங்கள் நாடுகளை விட்டு வெளியேற காரணமாய் அமைந்த பிரச்சனைகளையும் தீர்க்க உலக சமுதாயம் முன்வர வேண்டும் என்று பேராயர் யுர்க்கோவிச் அவர்கள் விண்ணப்பம் விடுத்தார்.

சமயங்களுக்கு இடையே உரையாடல்கள், மற்றவர்கள் மீது உள்ளார்ந்த மதிப்பு, மாறுபட்ட கலாச்சாரங்களைப் புரிந்துகொள்ளுதல் போன்றவை நிகழும்போது, சிறுபான்மை மதத்தவரையும், இனத்தவரையும் மதித்து ஏற்றுக்கொள்ளும் சூழல் உருவாகும் என்று பேராயர் யுர்க்கோவிச் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

அண்மையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், அல் அசார் இஸ்லாமிய முதன்மை குருவும் இணைந்து வெளியிட்ட ஒப்பந்தத்தில், உண்மையான மதங்கள் அனைத்துமே, உண்மையான அமைதியையும், நல்லிணக்கத்தையும் பரிந்துரைக்கின்றன என்ற கருத்து வலியுறுத்தப்பட்டிருப்பதை, பேராயர் யுர்க்கோவிச் அவர்கள் தன் உரையில் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 February 2019, 14:25