தேடுதல்

 திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு கூட்டத்தில் Ghisoni திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு கூட்டத்தில் Ghisoni  

முறைகேடுகள் குறித்த திருஅவையின் இரகசியம் மறுபரிசீலனைக்கு...

நாம் ஒருவருக்கொருவர் கடமைப்பட்டுள்ளோம் என்பது, இணைந்து செயலாற்றுதலை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

உலக அளவில் இடம்பெறும் சிறியோர்க்கெதிரான பாலியல் முறைகேடுகளை எதிர்கொள்வதற்கு, திருஅவையின் அனைத்து துறைகளும் இணைந்து செயலாற்ற வேண்டியது இன்றியமையாதது என்று, முனைவர் Linda Ghisoni அவர்கள் உரையாற்றினார்.

வத்திக்கானில் நடைபெற்றுவரும், "திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு" என்ற ஒரு முக்கிய கூட்டத்தில், "இணைந்து செயலாற்றுதல்" என்ற தலைப்பில், இவ்வெள்ளி மாலையில் உரையாற்றிய, பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீட அவையின் நேரடிப் பொதுச் செயலரான Linda Ghisoni அவர்கள், நாம் ஒருவருக்கொருவர் கடமைப்பட்டுள்ளோம் என்பது, இணைந்து செயலாற்றுதலை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறினார்.

ஒருவர் பேசுவதை மற்றவர் உற்றுக்கேட்பதன் வழியாக, பணியாற்ற நம்மையே அர்ப்பணிக்கின்றோம், இவ்வாறு நம்மை கையளிப்பதன் மூலம், இந்தக் கூட்டத்திற்குக் காரணமான மற்றுமொரு பிரச்சனையை, வருங்காலத்தில் இனிமேல் நாம் எதிர்கொள்ளமாட்டோம் என்று தான் நம்புவதாக உரைத்தார், Ghisoni.

 திருஅவையும், இறைமக்களும், பாதிக்கப்பட்ட மக்கள் மீது, திறமையுடனும், பொறுப்புணர்வுடனும், அன்புடனும் அக்கறை செலுத்தவும், இத்தகைய குற்றங்கள் நிகழாமல் தடுப்பதற்கு கருத்தாக்கமுள்ள திட்டங்களோடு நின்றுவிடாமல், அன்றாட மேய்ப்புப்பணியாக அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தவதாக, இத்தகைய கூட்டம் உள்ளது எனவும் Ghisoni அவர்கள் கூறினார்.

பாலியல் முறைகேடுகள் பற்றியும், அந்த முறைகேடுகள் எவ்வளவு தூரம் பரவியுள்ளன என்பது பற்றியும் அறிந்திருப்பது, நாம் ஒருவருக்கொருவர் பொறுப்பானவர்கள் என்பதன் அடிப்படையாக உள்ளது எனவும், இந்தப் பொறுப்புணர்வு, தீர்மானம் எடுக்கவைக்கும் கலந்துரையாடலை உள்ளடக்கியது என்றும், Ghisoni அவர்கள், தன் உரையில் கூறினார்.

நடைமுறை பரிந்துரைகள்

இறையியல் சார்ந்த கேள்விகள் மற்றும், நடைமுறை பரிந்துரைகளையும் தெரிவித்த Ghisoni அவர்கள், ஆயர்களுக்கு ஆலோசனை வழங்க, தனிப்பட்ட அவைகளை உருவாக்குவது உட்பட, தேசிய அளவில் நடைமுறைகளை ஆரம்பிப்பது, இத்தகைய குழுக்களை ஊக்குவிப்பதற்கு மத்திய அலுவலகம் ஒன்றை உருவாக்குவது, அவை தக்கவிதமாய் செயல்பட உதவுவது, திருஅவை விவகாரங்களில் இரகசியம் காப்பது குறித்த சட்டத்தை மறுபரிசீலனை செய்வது போன்ற பரிந்துரைகளைத் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 February 2019, 15:01