தேடுதல்

இயேசு சபை அருள்பணியாளர் Hans Zollner இயேசு சபை அருள்பணியாளர் Hans Zollner  

"திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு" கூட்டம் குறித்து...

"திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு" என்ற கூட்டத்தில், இந்த பிரச்சனையைச் சந்திக்க, ஒளிவு மறைவற்ற உறுதியான வழிமுறைகளை உலகின் அனைத்து மறைமாவட்டங்களிலும் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு" என்ற தலைப்பில், பிப்ரவரி 21ம் தேதி முதல் 24ம் தேதி முடிய வத்திக்கானில் நடைபெறும் கூட்டம், கத்தோலிக்கத் திருஅவை, சிறியோரை பாதுகாக்கும் பல்வேறு வழிமுறைகளைப் பற்றி சிந்திக்க ஒரு வாய்ப்பை உருவாக்குகிறது என்று, இயேசு சபை அருள்பணியாளர் Hans Zollner அவர்கள் கூறினார்.

வத்திக்கானில் நடைபெறவிருக்கும் ஆயர்களின் சிறப்புக் கூட்டத்தை ஒருங்கிணைக்கும் குழுவில் உறுப்பினரும், உரோம் நகரில் இயேசுசபையினரால் நடத்தப்படும் கிரிகோரியன் பாப்பிறைப் பல்கலைக் கழகத்தின் பேராசியருமான அருள்பணி Zollner அவர்கள், வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.

சிறியோரைப் பாதுகாப்பது குறித்த கருத்துப்பரிமாற்றங்கள், மேய்ப்புப்பணி சார்ந்த அக்கறையுடன் நடைபெறும் என்றும், கத்தோலிக்கத் திருஅவையைப் பாதிக்கும் இந்தப் பிரச்சனையில் ஒளிவு மறைவற்ற உறுதியான வழிமுறைகளை உலகின் அனைத்து மறைமாவட்டங்களிலும் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், அருள்பணி Zollner அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

மத்தியக் கிழக்குப் பகுதியிலும், வட ஆப்ரிக்க நாடுகளிலும் 85 விழுக்காடு சிறுவர், சிறுமியர் பாலியல் கொடுமைகளுக்கும், பிற வன்முறைகளுக்கும் உள்ளாகி வருகின்றனர் என்பதை, தன் பேட்டியில் குறிப்பிட்ட அருள்பணி Zollner அவர்கள், சிறியோரின் பாதுகாப்பு என்ற கருத்தில் கத்தோலிக்கத் திருஅவை தன் கூட்டத்தை நடத்தும் வேளையில், இந்தச் சிறியோரைக் குறித்தும் நம் சிந்தனைகள் எழுப்பப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 February 2019, 14:09