தேடுதல்

'சிறியோரின் பாதுகாப்பு' என்ற கருத்தில் கூட்டம் வத்திக்கானில் இடம்பெற உள்ளது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு 'சிறியோரின் பாதுகாப்பு' என்ற கருத்தில் கூட்டம் வத்திக்கானில் இடம்பெற உள்ளது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு 

'சிறியோரின் பாதுகாப்பு' கூட்டம் பற்றிய டிஜிட்டல் குறிப்பேடு

'திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு' கூட்டத்தில் பங்கேற்கும், 114 ஆயர் பேரவைகளின் தலைவர்களில், 18 பேர் ஆசியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

'திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு' என்ற மையக்கருத்துடன், வத்திக்கானில் இவ்வியாழனன்று துவங்கும் ஒரு முக்கியக் கூட்டத்தைக் குறித்து அறிய விரும்பும் செய்தியாளர்களுக்கு உதவும் நோக்கத்தில், 42 பக்கங்கள் அடங்கிய குறிப்பேடு, டிஜிட்டல் வடிவில், பிப்ரவரி 20, இப்புதனன்று வெளியிடப்பட்டது.

'சிறியோரின் பாதுகாப்பு' என்ற கருத்தில் கூட்டம் நடைபெறுவதற்கு பின்னணி, இந்தக் கூட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப முயற்சிகள், இக்கூட்டத்தில் பங்கேற்போர் குறித்த விவரங்கள், பொதுவாக, உலகெங்கும் சிறார் சந்திக்கும் கொடுமைகள் என்ற பல பகுதிகள், இந்த கையேட்டில் இடம் பெற்றுள்ளன.

திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்க உருவாக்கப்பட்டுள்ள கர்தினால்கள் அவையைச் சார்ந்தோர், 2018ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் மேற்கொண்ட சந்திப்பில், இந்த முக்கியமான கூட்டத்தைக் குறித்து முதல் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன என்று கூறும் இக்குறிப்பேடு, இதைத் தொடர்ந்து, இந்தக் கூட்டத்தின் பொறுப்பாளர்களை திருத்தந்தை நியமித்தது, ஆயர் பேரவைகளுக்கு அனுப்பப்பட்ட கடிதம் என்று, பல நிகழ்வுகள், பின்னணி தகவலாக வழங்கப்பட்டுள்ளன.

இந்தக் கூட்டத்தின் அனைத்து அமர்வுகளிலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தவறாமல் பங்கேற்பார் என்று கூறும் இவ்வேடு, இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் 190 உறுப்பினர்களின் விவரங்களை வழங்கியுள்ளது.

உலகெங்கிலும் உள்ள 114 ஆயர் பேரவைகளின் தலைவர்களில், 18 பேர் ஆசியாவிலிருந்தும், 36 பேர் ஆப்ரிக்காவிலிருந்தும் 32 பேர் ஐரோப்பாவிலிருந்தும், 24 பேர் வட, மற்றும், தென் அமெரிக்காவிலிருந்தும் 4 பேர் ஓசியானாவிலிருந்தும் வருகை தந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

இவர்கள் அல்லாமல், ஆண் துறவு சபைகளின் 12 உலகத் தலைவர்கள், பெண் துறவு சபைகளின் 10 உலகத் தலைவர்கள், திருப்பீடத்தின் உயர் அதிகாரிகள் 14 பேர், மற்றும் திருத்தந்தையால் சிறப்பான அழைப்பு பெற்றோர் என, 190 பேர் இக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

இந்தக் கூட்டத்திற்கு தயார் செய்யும் வகையில், ஒரு கருத்துக்கணிப்பு, அனைத்து மறைமாவட்டங்களுக்கும், அனுப்பப்பட்டதென்றும், 90 விழுக்காட்டினரிடமிருந்து பதில்கள் வந்து சேர்ந்தன என்றும் இக்கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 February 2019, 15:53