C9 கர்தினால்கள் குழுவின்  கூட்டம் C9 கர்தினால்கள் குழுவின் கூட்டம் 

C9 கர்தினால்கள் அவையின் 28வது கூட்டம்

கர்தினால்கள் அவையின் 28வது கூட்டத்தில், புதிய அப்போஸ்தலிக்க சட்ட தொகுப்பு குறித்தும், சிறியோர் பாதுகாப்பு மையப்படுத்திய கூட்டம் குறித்தும் விவாதங்கள் இடம்பெற்றன

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இவ்வாரத்தின் 18ம் தேதி முதல் 20ம் தேதி முடிய, வத்திக்கானில், C9 என்றழைக்கப்படும் கர்தினால்கள் அவையின் 28வது ஆலோசனைக் கூட்டம் இடம்பெற்றதென்றும், திருஅவையில் புதிய  அப்போஸ்தலிக்க சட்ட தொகுப்பு குறித்தும், இவ்வியாழன் முதல் இடம்பெறும் சிறியோர் பாதுகாப்பு குறித்த கூட்டம் குறித்தும் இச்சந்திப்பில் அதிகம் விவாதிக்கப்பட்டதென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருஅவையில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய அப்போஸ்தலிக்க சட்டத்தொகுப்பு குறித்து C9 கர்தினால்கள் அவை தற்போது விவாதித்துள்ளதாகவும், அடுத்து, உலக ஆயர் பேரவைகளுடனும், திருப்பீடத்தின் பல்வேறு நிர்வாக அதிகாரிகளுடனும் கலந்தாலோசித்தபின், திருத்தந்தையின் ஒப்புதலுக்கு இந்த தொகுப்பேடு வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருஅவையில், சிறார் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து, இவ்வியாழன் முதல் ஞாயிறு வரை இடம்பெறும் கூட்டம் குறித்தும், C9 கர்தினால்கள் குழு, விவாதங்களை மேற்கொண்டது.

திருத்தந்தையுடன், கர்தினால்கள் Pietro Parolin, Óscar Rodríguez Maradiaga, Reinhard Marx, Seán Patrick O’Malley, Giuseppe Bertello மற்றும் Oswald Gracias ஆகியோர் கலந்து கொண்ட இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமெரிக்க முன்னாள் கர்தினால் Theodore McCarrick குறித்து எழுந்த கருத்துப் பரிமாற்றங்களில், அவரை, குருத்துவப்பணிகள் அனைத்திலிருந்தும் நீக்கியுள்ளது, நீதி நிர்வாகம் தொடர்புடைய ஒரு முக்கிய படி என்று கூறப்பட்டது.

சிறியோர், பாலியல் முறையில் திருஅவை அதிகாரிகளால் நடத்தப்பட்டது குறித்து விவாதிக்கும் சிறப்புக் கூட்டத்தைக் குறித்து, இந்த ஆலோசனை அவைக்கு அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் விளக்கிக் கூறினார்.

C9 கர்தினால்கள் குழுவின் அடுத்தக் கூட்டம், ஏப்ரல் மாதம், 8 முதல் 10 வரை இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 February 2019, 15:39