கல்கத்தாவில் கர்தினால் பீட்டர் டர்க்சன் கல்கத்தாவில் கர்தினால் பீட்டர் டர்க்சன் 

மீறமுடியாத மனித மாண்பை உயர்த்திப் பிடிக்கும் திருஅவை

மனிதத் துன்பங்களை சுமந்த இறைமகனின் எடுத்துக்காட்டைப் பின்பற்றும் கிறிஸ்தவர்கள், நோயாளர்களை திருஅவையின் சொத்தாகக் கருதவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மீறமுடியாத மனித மாண்பை உயர்த்திப் பிடித்ததாக, திருஅவை தன் துவக்கக் காலத்திலிருந்தே, தன் நிறுவனங்கள் வழியாக, ஏழைகள், நோயாளிகள் மற்றும் துன்புறுவோர் இடையே சிறப்புப் பணிகளை ஆற்றிவருகிறது என்றார் கர்தினால் பீட்டர் டர்க்சன்.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் டர்க்சன் அவர்கள், கொல்கத்தாவில் இடம்பெறும் 27வது உலக நோயாளர் நாள் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

'கொடையாகப் பெற்றீர்கள், கொடையாகவே வழங்குங்கள்' என்ற தலைப்பில் நடைபெறும் உலக நோயாளர் நாள் நிகழ்வுகளில், இச்சனிக்கிழமையன்று உரையாற்றிய கர்தினால் டர்க்சன் அவர்கள், நோயாளர் மீது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் காட்டிவரும் தனிப்பட்ட அக்கறை, அவரின் கருத்துக்கள் போன்றவற்றைச் சுட்டிக்காட்டி, திருத்தந்தையோடு இணைந்து, நோயாளர்களையும், வாழ்வில் துன்பங்களை அனுபவிப்போரையும், அக்கறையுடன் நடத்துவதற்கு அனைவரிடமும் விண்ணப்பித்தார்.

நல்ல சமாரியர் உவமையுடன் தன் உரையைத் துவக்கிய கர்தினால் டர்க்சன் அவர்கள், நோயாளர்கள் மற்றும் துன்புறுவோரின் முகங்களில் இயேசுவைக் காண்பது குறித்து எடுத்துரைத்தார்.

மனித அனுபவங்களிலிருந்து, நோயையும், துன்பங்களையும், இறைவன் அகற்றிவிடவில்லை, மாறாக, அவற்றை, தானே சுமந்ததன் வழியாக, அவைகளுக்கு ஒரு புது அர்த்தத்தை அவர் கொடுத்தார் என திருத்தந்தை கூறியுள்ளதை, தன் உரையில் சுட்டிக் காட்டினார், கர்தினால் டர்க்சன்.

மனிதத் துன்பங்களைச் சுமந்த இறைமகனின் எடுத்துக்காட்டைப் பின்பற்றும் கிறிஸ்தவர்கள், நோயாளர்களை திருஅவையின் சொத்தாகக் கருதவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

துன்புறுவோருக்குப் பணியாற்றுவதில் நாம் கடைபிடிக்க வேண்டிய  விதிமுறைகள், நம்பிக்கையையும் இறைவனின் புன்னகையையும் நோயாளர்களுக்கு கொணர்வதில் நம் கடமை, துன்பங்கள் குறித்து மனிதகுல பரிந்துரை, கருணை காட்ட திருஅவை பெற்றுள்ள அழைப்பு போன்றவை குறித்தும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கருத்துக்களை தன் உரையில் மேற்கோள்காட்டினார்,  ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 February 2019, 14:50