கர்தினால் கிரேசியஸ் கர்தினால் கிரேசியஸ்  

திருஅவை, நீதிக்கும், குணப்படுத்தலுக்கும் ஒருங்கிணைந்து...

அருள்பணியாளர்களின் பாலியல் முறைகேடுகளால் திருஅவையிலும், பாதிக்கப்பட்டவர்களிடமும் ஏற்பட்டுள்ள காயங்களை அகற்றுவதற்கு, ஒருங்கிணைந்த நிலை மிகவும் முக்கியம்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

"திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு" என்ற தலைப்பில், பிப்ரவரி 22, இவ்வெள்ளி காலை ஒன்பது மணிக்குத் துவங்கிய அமர்வில் உரையாற்றிய, மும்பை பேராயர் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள், திருத்தந்தையின் தலைமையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த திருஅவை சமுதாயம், நீதிக்கும், குணப்படுத்தும் பணிக்கும் தன்னையே வழங்குகின்றது என்று கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிரசன்னத்தில் துவங்கிய இந்த அமர்வில், "ஒருங்கிணைந்த நிலை : அனுப்பப்படுதல்" என்ற தலைப்பில் உரையாற்றிய, கர்தினால் கிரேசியஸ் அவர்கள், பிரச்சனைகளுக்குப் பதில் சொல்வதில் திருஅவையின் பொறுப்புணர்வு என்பதை மையப்படுத்திப் பேசினார். 

திருஅவையில் இடம்பெற்றுள்ள பாலியல் முறைகேடுகளின் காயங்களைக் களைவதற்கு, ஒருங்கிணைந்த நிலை தேவைப்படுகின்றது என்றுரைத்த கர்தினால் கிரேசியஸ் அவர்கள், ஒருங்கிணைந்த மற்றும் பொறுப்புணர்வுடன்கூடிய நிலை எவ்வாறு வாழப்பட வேண்டும் என்பதையும் விளக்கினார்.

முறைகேடுகளால் ஏற்பட்ட காயங்களை அகற்றுவதற்கு

அருள்பணியாளர்களின் பாலியல் முறைகேடுகளால் திருஅவையிலும், பாதிக்கப்பட்டவர்களிடமும் ஏற்பட்டுள்ள காயங்களை அகற்றுவதற்கு, ஒருங்கிணைந்த நிலை மிகவும் முக்கியம் என்றும், நான் வாழ்கின்ற உலகில், விவகாரங்கள் வேறு விதமாக உள்ளன, எனவே இதில் எனக்கு அக்கறை இல்லையெனக் கூறி, எந்த ஓர் ஆயரும் ஒதுங்கிக் கொள்ள முடியாது, ஏனெனில், உலகளாவியத் திருஅவைக்கு நாம் ஒவ்வொருவரும் பொறுப்பானவர்கள் என்றும், கர்தினால் கிரேசியஸ் அவர்கள் கூறினார்.

நமது அக்கறை, தலத்திருஅவையையும் கடந்து, எல்லாத் தலத்திருஅவைகள் மீதும் இருக்க வேண்டும் என்றுரைத்த கர்தினால் கிரேசியஸ் அவர்கள், ஒருங்கிணைந்த மற்றும் நாம் ஒருவருக்கொருவர் பொறுப்பானவர்கள் என்ற உணர்வு நிலை, இறைமக்களின் உலகளாவிய தன்மையையும், நாம் எல்லாரும், கிறிஸ்துவின் ஒரே மந்தையைச் சேர்ந்தவர்கள் என்பதையும் ஏற்பதிலிருந்து பிறப்பதாகும் என்று உரையாற்றினார்.

திருஅவையில் இடம்பெறும் இப்பிரச்சனைக்கு, விரைவாக அல்லது அறுதியான ஒரு தீர்வை உடனடியாகக் கொண்டு வர இயலாது, மாறாக, நாம் துணிவுடனும், உறுதியுடனும் ஒன்றிணைந்து, குணப்படுத்தும் பாதை நோக்கிச் செல்ல வேண்டும் என்று கூறினார், கர்தினால் கிரேசியஸ்.

நீதி, குணப்படுத்தல், பயணம்செய்யும் திருஅவை

திருஅவையில் இடம்பெறும் பாலியல் முறைகேடு சார்ந்த பிரச்சனைக்கு, நீதி, குணப்படுத்தல் மற்றும் திருப்பயணம் அவசியம் என்றுரைத்த மும்பை பேராயர், தவறிழைத்தவர்கள் நீதியின்முன் நிறுத்தப்படுவதற்கு, நாம் அனைவரும் தனியாகவும், குழுவாகவும் செயல்பட வேண்டிய முக்கிய கடமை உள்ளது என்று கூறினார்.

குணப்படுத்தலைப் பொறுத்தவரை, பாதிக்கப்பட்டவர்களை அணுகிச் சென்று, அவர்களோடு, ஒருங்கிணைந்த திருஅவையின் நேர்மையான தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்று கர்தினால் கூறினார்.

பயணம் மேற்கொள்ளும் கடவுளின் மக்கள் என்ற முறையில், பாவங்களுக்கு மனம் வருந்துதலும், தெளிந்து தேர்தலும், மன்னிப்பும் திருஅவையில் தொடர்ந்து இடம்பெற வேண்டும் என்றுரைத்த கர்தினால், இதற்கு, துணிச்சலும், மனஉறுதியும் அவசியம் என்றார்.

நிச்சயமற்ற மற்றும் வேதனையான சூழல்களில், கடவுளின் விருப்பத்தைப் பின்பற்றி, அதன்படி செயல்பட நாம் மனது வைக்க வேண்டும் என்றும், இந்த அமர்வில் கூறினார், கர்தினால் கிரேசியஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 February 2019, 15:13