27வது உலக நோயாளர் நாள் - 11.02.2019 27வது உலக நோயாளர் நாள் - 11.02.2019 

கொல்கத்தாவில் நடைபெறும் 27வது உலக நோயாளர் நாள்

2003ம் ஆண்டு, உலக நோயாளர் நாள், தமிழகத்தின் வேளாங்கண்ணி திருத்தலத்தில் கொண்டாடப்பட்டதையடுத்து, தற்போது, இந்தியாவில், இரண்டாவது முறையாக, இவ்வாண்டு, 27வது உலக நோயாளர் நாள், கொல்கத்தாவில் கொண்டாடப்படுகிறது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் தலைமையில், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று, பிப்ரவரி 8, இவ்வெள்ளி முதல், 12 வருகிற செவ்வாய் முடிய, கொல்கத்தாவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறது.

பிப்ரவரி 11, லூர்து நகர் அன்னை மரியா திருநாளன்று கொண்டாடப்படும் உலக நோயாளர் நாள், இவ்வாண்டு 27வது முறையாக கொல்கத்தாவில் கொண்டாடப்படுவதையொட்டி, அங்கு சென்றுள்ள கர்தினால் டர்க்சன் அவர்கள், திருத்தந்தையின் செய்தியை அங்கு வாசித்தளிப்பார்.

திருத்தந்தையின் பிரதிநிதியாக இக்கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள அனுப்பப்பட்டுள்ள பங்களாதேஷ் கர்தினால் பாட்ரிக் டி' ரொசாரியோ,  கர்தினால் பீட்டர் டர்க்சன், கொல்கத்தா பேராயர் தாமஸ் டி'சூசா, மற்றும் ஆசிய ஆயர் பேரவையின் பிரதிநிதிகள் பலரும் இக்கொண்டாட்டங்களில் கலந்துகொள்கின்றனர்.

பிப்ரவரி 11ம் தேதி, கொல்கத்தாவுக்கருகே பாண்டெல் (Bandel) எனுமிடத்தில் அமைந்துள்ள செபமாலை அன்னை பசிலிக்காவில் நடைபெறும் இறுதித் திருப்பலியை கர்தினால் டி' ரொசாரியோ அவர்கள் தலைமையேற்று நடத்துவார்.

2003ம் ஆண்டு, உலக நோயாளர் நாள், தமிழகத்தின் வேளாங்கண்ணி திருத்தலத்தில் கொண்டாடப்பட்டதையடுத்து, தற்போது, இந்தியாவில், இரண்டாவது முறையாக, இவ்வாண்டு, 27வது உலக நோயாளர் நாள், கொல்கத்தாவில் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 February 2019, 15:13