தேடுதல்

"திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு"  கூட்டம் "திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு" கூட்டம் 

பாலியல் கொடுமைகளுக்கு உள்ளானோருடன் சந்திப்பு

வத்திக்கானில் நடைபெறும் கூட்டத்தினை ஒருங்கிணைக்கும் குழுவைச் சேர்ந்தவர்கள், பாலியல் கொடுமைகளுக்கு உள்ளான 12 பேரை, பிப்ரவரி 20, இப்புதனன்று, சந்தித்துப் பேசினர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு" என்ற தலைப்பில், வத்திக்கானில் நடைபெறும் மூன்று நாள் கூட்டம், இவ்வியாழன் 9 மணிக்கு, ஆயர்கள் மாமன்ற அரங்கத்தில் துவங்கியது.

இவ்வமர்வின் ஆரம்பத்தில் இடம்பெற்ற ஒரு செப வழிபாட்டில், தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா, கிழக்கு ஐரோப்பா, அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் ஆசியா ஆகிய பகுதிகளில் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளானவர்கள் வழங்கிய சாட்சியங்கள் காணொளியாகக் காட்டப்பட்டன.

இதைத் தொடர்ந்து, ஆழ்ந்த அமைதியும், செபங்களும் இடம்பெற்றதையடுத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் துவக்க உரையை சுருக்கமாக வழங்கினார்.

"திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு" என்ற கூட்டத்திற்கு முன்னேற்பாடாக, உலகின் பல பகுதிகளில் ஆயர் பேரவைகள் மேற்கொண்ட விவாதங்களிலிருந்து வெளிவந்த 21 கருத்துக்களின் தொகுப்பு ஒன்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரையின் துவக்கத்தில், பிரதிநிதிகளுக்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருத்தந்தையின் உரைக்குப் பின், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்களும், பேராயர் சார்லஸ் ஷிக்ளூனா அவர்களும் இரு உரைகளை வழங்கியதைத் தொடர்ந்து, இடம்பெற்ற குழு விவாதங்களுடன், காலை அமர்வு முடிவுற்றது.

இதற்கிடையே, வத்தக்கானில் நடைபெறும் இக்கூட்டத்தினை ஒருங்கிணைக்கும் குழுவைச் சேர்ந்தவர்கள், பாலியல் கொடுமைகளுக்கு உள்ளான 12 பேரை, பிப்ரவரி 20, இப்புதனன்று, சந்தித்துப் பேசினர் என்று வத்திக்கான் செய்தித் துறை அறிவித்துள்ளது.

2 மணி நேரம் நீடித்த இச்சந்திப்பில், பாலியல் கொடுமைகளுக்கு உள்ளானோர், தங்கள் வேதனைகளைக் குறித்த உளமார்ந்த உண்மைகளைக் கூறினர் என்றும், ஒருங்கிணைக்கும் குழுவினர், அந்த பன்னிருவருக்கும் தங்கள் ஆழ்ந்த நன்றியைக் கூறினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 February 2019, 15:29