தேடுதல்

Vatican News
பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர்  (ANSA)

ILO நூற்றாண்டு கருத்தரங்கில் பேராயர் காலகர்

உலகெங்கும் பணியாற்றிவரும் தொழிலாளர்களில் பெரும்பான்மையானோர், நிரந்தர ஒப்பந்தங்கள் ஏதுமின்றி உழைக்கும் கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர் – திருப்பீடத்தின் கவலை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

முன்னெப்போதும் இல்லாத அளவு, தொழில் உலகிலிருந்து வெளிவரும் சவால்களை இவ்வுலகம் சந்திக்க வேண்டியுள்ளது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், பன்னாட்டு கருத்தரங்கில் கூறினார்.

ILO என்று சுருக்கமாக அழைக்கப்படும் பன்னாட்டு தொழில் நிறுவனம், தன் முதல் நூற்றாண்டைச் சிறப்பிப்பதையடுத்து, இந்நிறுவனம், ஜெனீவாவில் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில், திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்கள் வழங்கிய உரையில், இவ்வாறு கூறினார்.

இந்த நூற்றாண்டு கொண்டாட்டத்தையொட்டி, கிறிஸ்தவ சபைகளின் உலக அவை, இஸ்லாமிய கூட்டுறவு நிறுவனம் மற்றும் திருப்பீடம் ஆகியவற்றிற்கு அழைப்பு விடுத்துள்ள ILO நிறுவனத்திற்கு, தன் நன்றியை வெளியிட்டார், பேராயர் காலகர்.

உலகெங்கும் பணியாற்றிவரும் தொழிலாளர்களில் பெரும்பான்மையானோர், நிரந்தர ஒப்பந்தங்கள் ஏதுமின்றி உழைக்கும் கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்பதை, தன் உரையில் சுட்டிக்காட்டிய பேராயர் காலகர் அவர்கள், இந்த நிலை, சமுதாயத்தில், சம நிலையற்ற, பாதுகாப்பற்ற ஒரு சூழலை உருவாக்குகிறது என்று கவலையை வெளியிட்டார்.

தொழிலாளர்கள் நீதியற்ற, நிரந்தரமற்ற பணிகளை செய்யவேண்டியுள்ள நிலையில், பொருளாதாரத்தில் பெரும் இலாபம் ஈட்டும் செல்வந்தர்கள், தங்களைச் சுற்றி 'பொருளாதாரக் குமிழிகளை' உருவாக்கிக்கொண்டு. சமுதாயத்தின் உண்மை நிலைகளிலிருந்து விலகி வாழ்கின்றனர் என்பதையும், பேராயர் காலகர் அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.

நீதியும், சமத்துவமும் குலைந்திருக்கும் இச்சமுதாயத்தில், மீண்டும், நீதியையும், சமத்துவத்தையும் நிலைநாட்டும் கடமையில், கத்தோலிக்கத் திருஅவை ஈடுபட்டுள்ளது என்பதை, பேராயர் காலகர் அவர்கள் தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.

தொழிலாளர் நலனை மனதில் கொண்டு, கத்தோலிக்கத் திருஅவை வெளியிட்டுள்ள சமுதாயப் படிப்பினைகளை பல்வேறு மேற்கோள்களாகக் காட்டி, பேராயர் காலகர் அவர்கள் தன் உரையை நிறைவு செய்தார்.

27 February 2019, 15:16