தேடுதல்

அமெரிக்க ஆயர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அமெரிக்க ஆயர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் 

திருஅவையின் நம்பகத்தன்மையை வளர்க்கும் கூட்டம்

‘திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு’ என்ற மையக்கருத்துடன் வத்திக்கானில் நடைபெறவிருக்கும் ஆயர்களின் முக்கிய கூட்டம், திருஅவை மீது மக்களின் நம்பகத்தன்மையை வளர்க்கும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

‘திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு’ என்ற மையக்கருத்துடன் பிப்ரவரி 21ம் தேதி முதல், 24ம் தேதி முடிய வத்திக்கானில் நடைபெறவிருக்கும் ஆயர்களின் முக்கிய கூட்டம், திருஅவை மீது மக்களின் நம்பகத்தன்மையை வளர்க்கும் என்று தான் நம்புவதாக, இக்கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் கூறினார்.

நடைபெறவிருக்கும் இக்கூட்டத்தினை ஏற்பாடு செய்யும் குழுவில் ஒருவரான, இயேசு சபை அருள்பணியாளர் Hans Zollner அவர்கள், வத்திக்கான் செய்திக்கு அளித்த பேட்டியில், இக்கூட்டத்திற்குத் தேவையான அனைத்து தயாரிப்புகளும் சீராக, தீவிரமாக நடைபெற்று வருவதாகக் கூறினார்.

'சிறியோரின் பாதுகாப்பு' என்ற முயற்சி, திருஅவையில் இது முதல் முறையாக நடைபெறும் முயற்சி அல்ல என்பதை, தன் பேட்டியில் தெளிவுபடுத்திய அருள்பணியாளர் Zollner அவர்கள், பிப்ரவரியில் நடைபெறும் கூட்டம், இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாண, இன்னும் தீவிரமான முயற்சியை மேற்கொள்ளும் என்று எடுத்துரைத்தார்.

திருஅவையில் காணப்படும் இந்தப் பிரச்சனை, இந்தக் கூட்டத்துடன் முடிவுக்கு வந்துவிடும் என்பதும் சரியான கணிப்பு அல்ல என்று கூறிய அருள்பணி Zollner அவர்கள், இக்கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களை, தலத்திரு அவைகள், தொடர்ந்து செயல்படுத்துவதும், திருஅவைப் பணியாளர்களை தகுதியான முறையில் உருவாக்குவதும், இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகளாகும் என்று கூறினார்.

பாலியல் வழியில் துன்புறுத்தப்பட்டவர்களும் நடைபெறவிருக்கும் கூட்டத்தில், கலந்துகொள்வார் என்பதை, அருள்பணி Zollner அவர்கள், தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 January 2019, 15:08