அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் தியானம் மேற்கொள்ளும் இடம் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் தியானம் மேற்கொள்ளும் இடம் 

திருத்தந்தை, அகிலத் திருஅவைக்கும் பாதையைச் சுட்டிக்காட்டுகிறார்

திருஅவையில் இடம்பெறும் தவறான நடைமுறைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு, பல ஆண்டுகளாக, திருத்தந்தையர், சரியான மற்றும் கண்டிப்பான விதிமுறைகளைக் கொண்டுவந்துள்ளனர்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களுக்கு எழுதியுள்ள கடிதம் பற்றி கருத்து தெரிவித்துள்ள, திருப்பீட தகவல் தொடர்புத் துறையின் செய்திப் பிரிவு இயக்குனர், அந்த்ரேயா தொர்னியெல்லி அவர்கள், இக்கடிதம், அகிலத் திருஅவையும் முன்னோக்கிச் செல்வதற்கு, பாதையைச் சுட்டிக்காட்டுவதாய் உள்ளது என்று கூறியுள்ளார்.

சிக்காகோ நகருக்கருகே அமைந்துள்ள குருத்துவ பயிற்சி இல்லமொன்றில் தங்கள் ஆண்டு தியானத்தை மேற்கொண்டுவரும் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனிப்பட்ட முறையில், நெருக்கமாக இருப்பதன் அடையாளமாக, இக்கடிதம் உள்ளது எனவும் கூறியுள்ளார், தொர்னியெல்லி.

கத்தோலிக்க திருஅவையில், அருள்பணியாளர்கள் மற்றும் ஆயர்கள் சிலரால் இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகள் சார்ந்த பிரச்சனைகள் குறித்த திருத்தந்தையின் புரிந்துகொள்தலையும், வருகிற பிப்ரவரியில், வத்திக்கானில் நடைபெறவிருக்கும் கூட்டத்தைக் கருத்தில் கொண்டும், இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது என்றும், தொர்னியெல்லி அவர்கள் தெரிவித்துள்ளார்.

மனித வளங்கள் துறையாக மாறியுள்ள ஒரு திருஅவை, நற்செய்தியின் மறுமணத்தை எப்போதும் கொண்டிருப்பதில்லை எனவும், இத்தகைய திருஅவை, தனது விசுவாசத்தை, வெறுமனே யுக்திகளிலும், நிர்வாகப் பட்டியல்களிலும், திறமையான நடைமுறைகளிலும் வைக்கின்றது எனவும், திருத்தந்தை கூறியுள்ளதாக, தொர்னியெல்லி அவர்கள் கூறியுள்ளார்.

இவ்வாறு செயல்படும் திருஅவை, கடந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகளாக வழிநடத்தி வருகின்ற இறைவனின் பிரசன்னத்திலும், அவரின் மீட்பளிக்கும் அருளிலும், ஒவ்வொரு நாளும் சத்தமின்றி செயல்படும் தூய ஆவியாரிலும், நம்பிக்கை வைக்காமல், 

இருக்கின்றது என்றுரைத்துள்ள திருத்தந்தையின் கருத்தையும், தொர்னியெல்லி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

1980ம் ஆண்டு முதல், பாப்பிறை இல்லத்தின் மறையுரையாளராகப் பணியாற்றிவரும் அருள்பணி இரானியேரோ காந்தலாமெஸ்ஸா (Raniero Cantalamessa) அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று, இந்த ஆண்டு தியானத்தை வழிநடத்தி வருகிறார். அமெரிக்க ஆயர்களின் இந்த ஆண்டு தியானம், சனவரி 8, வருகிற செவ்வாயன்று நிறைவடையும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 January 2019, 14:58