தேடுதல்

திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் தலைவர், முனைவர் பவுலோ ருஃபீனி திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் தலைவர், முனைவர் பவுலோ ருஃபீனி 

பன்னாட்டு கருத்தரங்கில் Paolo Ruffini வழங்கிய உரை

தகவல் தொடர்புக் கருவிகள் மட்டும் நமது தொடர்புகளை உறுதிப்படுத்த இயலாது, மாறாக, மனிதர்கள் நேருக்கு நேர் சந்திப்பது மட்டுமே தொடர்புகளை உறுதிப்படுத்தும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலக எதார்த்தத்தை நேருக்கு நேர் சந்தித்து, அதனை உள்வாங்கி, பிரதிபலிப்பதே, உண்மையான செய்தித் தொடர்பாளரின் பண்பு என்றும், இதற்கு மாறாக, பொய்யான கருத்தியல்களை உருவாக்கி, பரப்ப முயல்வது, பொய்யான செய்தித்தொடர்பியல் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளதை, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், பன்னாட்டு கருத்தரங்கில் எடுத்துரைத்தார்.

சனவரி 30, இப்புதனன்று, பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில், நடைபெற்ற 23வது புனித பிரான்சிஸ் டி சேல்ஸ் பன்னாட்டு கருத்தரங்கில் உரையாற்றிய திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் தலைவர், முனைவர் பவுலோ ருஃபீனி (Paolo Ruffini) அவர்கள் இவ்வாறு கூறினார்.

நம் மத்தியில் வளர்ந்துள்ள தகவல் தொடர்புக் கருவிகள், நம்மை இணைக்கவும் முடியும், பிரிக்கவும் முடியும் என்று தன் உரையில் எச்சரிக்கை விடுத்த ருஃபீனி அவர்கள், கருவிகள் மட்டும் நமது தொடர்புகளை உறுதிப்படுத்த இயலாது, மாறாக, மனிதர்கள் நேருக்கு நேர் சந்திப்பது மட்டுமே தொடர்புகளை உறுதிப்படுத்தும் என்று எடுத்துரைத்தார்.

நன்மை மற்றும் தீமை இரண்டிற்கும் நடுவே, சரியான தகவல்களைத் தெரிவு செய்து, அவற்றைப் பரப்புவது, தொடர்பாளர்கள், மற்றும் செய்தியாளர்களின் முக்கிய கடமை என்றும், செய்திகளை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வதற்கு முன், அவற்றை சரியான முறையில் காண்பதில் செய்தியாளர்கள் அக்கறை காட்டவேண்டும் என்றும் ருஃபீனி அவர்கள், தன் உரையில் விண்ணப்பித்தார்.

புனித பிரான்சிஸ் டி சேல்ஸ் பன்னாட்டு கருத்தரங்கு என்ற முயற்சியில், திருப்பீட தகவல் தொடர்புத் துறை, 2018ம் ஆண்டு முதல் இணைந்தது என்றும், சென்ற ஆண்டு உரோம் நகரில் நடைபெற்ற கருத்தரங்கில், 26 நாடுகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் பங்கேற்றனர் என்றும், ருஃபீனி அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 January 2019, 16:01