OSCE எனப்படும், ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அவை OSCE எனப்படும், ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அவை 

OSCEன் நடவடிக்கைகளில் இளையோரின் பங்கு இணைக்கப்பட வேண்டும்

சமய சுதந்திரம் மதிக்கப்படுவது, ஏனைய அடிப்படை சுதந்திரங்கள் மதிக்கப்படுவதற்கு அளவுகோலாகும் - பேரருள்திரு Urbanczyk

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்தவர்கள், யூதர்கள், முஸ்லிம்கள் மற்றும் ஏனைய மதங்களின் உறுப்பினர்கள் அவ்வப்போது பாதுகாப்பு தொடர்புடைய பிரச்சனைகளை எதிர்கொள்கின்றவேளை, இது குறித்து, ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அவை, மேலும் கவனம் செலுத்த வேண்டுமென்று திருப்பீடம் கேட்டுக்கொண்டுள்ளது.

OSCE எனப்படும், ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அவையின் தலைமைப்பணியை, 2019ம் ஆண்டில் ஏற்றிருக்கும் சுலோவாக்கிய குடியரசின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் Miroslav Lajcak அவர்களை, திருப்பீடத்தின் சார்பில் வரவேற்று பேசிய, பேரருள்திரு Januz Urbanczyk அவர்கள், இப்புதிய தலைமை கவனம் செலுத்த வேண்டிய முக்கிய கூறுகள் பற்றி எடுத்துரைத்தார்.

OSCE அவையின் 1211வது கூட்டத்தில் உரையாற்றிய, அந்த அவைக்கான, திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதி பேரருள்திரு Urbanczyk அவர்கள், சமய சுதந்திரம் மதிக்கப்படுவது, ஏனைய மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்கள் மதிக்கப்படுவதற்கு அளவுகோலாகும் என்றும் தெரிவித்தார்.

ஐ.நா.வின் 2030ம் ஆண்டின், நீடித்த நிலையான வளர்ச்சித்திட்ட இலக்குகள் நிறைவேற்றப்படுவதை, திருப்பீடம் உறுதியாக ஆதரிக்கின்றது எனவும், இதற்கு உலகளாவிய முயற்சிகள் தேவைப்பட்டாலும், OSCE அவையின் பங்கும் முக்கியம் என்பதையும், பேரருள்திரு Urbanczyk அவர்கள் சுட்டிக்காட்டினார்.

2030ம் ஆண்டின் உலக சமுதாயத்தின் வளர்ச்சித்திட்ட இலக்குகளில், பன்னாட்டு சட்டம் முழுமையாக மதிக்கப்படுவது உட்பட, ஐ.நா. அறிக்கைகளின்படி அவை, செயல்படுத்தப்பட வேண்டுமென்பதைச் சுட்டிக்காட்டிய பேரருள்திரு Urbanczyk அவர்கள், OSCE அவையின் நடவடிக்கைகளில் இளையோரின் பங்கும் இணைக்கப்பட வேண்டுமென்பதை திருப்பீடம் விரும்புகின்றது என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 January 2019, 14:51