தேடுதல்

திருப்பீட செய்தித் தொடர்பகத்தின், இடைக்கால இயக்குனர் ஜிசோத்தி திருப்பீட செய்தித் தொடர்பகத்தின், இடைக்கால இயக்குனர் ஜிசோத்தி 

திருப்பீட செய்தித் தொடர்பக இடைக்கால இயக்குனர் ஜிசோத்தி

திருத்தந்தை தன்மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார், திருப்பீட செய்தித் தொடர்பக இடைக்கால இயக்குனர் Gisotti

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து பணியாற்றிய, திருப்பீட செய்தித் தொடர்பக இயக்குனர் Greg Burke அவர்கள், அதன் உதவி இயக்குனர் Paloma García Ovejero அவர்கள், ஆகிய இருவரின் பதவி விலகலை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்தொடர்பகத்தின் இடைக்கால இயக்குனராக, அலெசாந்த்ரோ ஜிசோத்தி (Alessandro Gisotti) என்பவரை, டிசம்பர் 31, இத்திங்களன்று நியமித்துள்ளார், 2019ம் ஆண்டு சனவரி 1, இச்செவ்வாயன்று, தனது பணியைத் தொடங்கும், ஜிசோத்தி அவர்கள், திருப்பீட சமூகத்தொடர்பு துறையின் சமூகவலைத்தளத்தின் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியவர். 44 வயதாகும் இவருக்கு, இரு குழந்தைகள் உள்ளனர்.

ஊடகவியலாளரான இவர், உரோம், "La Sapienza" பல்கலைக்கழகத்தில், 1999ம் ஆண்டில், அரசியல் அறிவியலில் பட்டயம் பெற்றவர். இரண்டாயிரமாம் ஆண்டில், வத்திக்கான் வானொலியில் பணியைத் தொடங்கிய இவர், திருத்தந்தையரின் பல்வேறு திருத்தூதுப் பயணங்களில் செய்தியாளராகப் பணியாற்றியிருக்கிறார்.  உரோம் இயேசு சபையினரின் Maximus நிறுவனத்திலும், உரோம் லாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகத்திலும், ஊடகவியல் பேராசிரியராகவும் பணியாற்றுகின்றார்.

இப்புதிய பணி பற்றிப் பேசிய, Alessandro Gisotti அவர்கள், திருத்தந்தை தன்மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி தெரிவிப்பதாகவும், திருப்பீட சமூகத்தொடர்புத் துறையின் தலைவர் Paolo Ruffini அவர்களுக்கு, முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

முன்னாள் திருப்பீட செய்தித் தொடர்பாளர், இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்களின் இருபது வருட பணிக்காலத்தில் அவருக்கு உதவிசெய்ததன் வழியாக, தான் கற்றுக்கொண்டவைகளை நன்றியுடன் நினைவுகூர்ந்துள்ளார் Gisotti.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக, இப்பணியை ஆற்றிய, Greg Burke, Paloma Garcia Ovejero ஆகிய இருவருக்கும், தனது பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துள்ளார், திருப்பீட செய்தித் தொடர்பகத்தின், இடைக்கால இயக்குனர், அலெசாந்த்ரோ ஜிசோத்தி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 January 2019, 15:22