தேடுதல்

பிப்ரவரி சந்திப்பை வழிநடத்த திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ள அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி பிப்ரவரி சந்திப்பை வழிநடத்த திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ள அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி 

"திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு" சிறப்பு கூட்டம் பற்றி...

வத்திக்கானில் நடைபெறவிருக்கும் சந்திப்பின் நிறையமர்வுக் கூட்டத்தை வழிநடத்தும் பொறுப்பை, இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்களுக்கு திருத்தந்தை வழங்கியுள்ளார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு" என்ற மையக்கருத்தில், பிப்ரவரி 21ம் தேதி முதல் 24ம் தேதி முடிய வத்திக்கானில் நடைபெறவிருக்கும் ஒரு முக்கியமான கூட்டத்தைக் குறித்த அறிக்கையொன்றை, வத்திக்கான் தகவல் தொடர்புத் துறையின் இடைக்கால இயக்குனர் அலெஸ்ஸாந்த்ரோ ஜிசோத்தி அவர்கள், இப்புதனன்று செய்தியாளர்களிடம் வழங்கினார்.

உலகின் அனைத்து ஆயர் பேரவைகளின் தலைவர்கள், துறவுக் குழுமங்களின் உலகத் தலைவர்கள், மற்றும் திருத்தந்தையால் சிறப்பாக அழைக்கப்பெற்றோர் கலந்துகொள்ளும் இந்தச் சந்திப்பின் நிறையமர்வுக் கூட்டத்தை வழிநடத்தும் பொறுப்பை, இயேசு சபை அருள்பணியாளரும் வத்திக்கான் வானொலியின் முன்னாள் இயக்குனருமான அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்களுக்கு திருத்தந்தை வழங்கியுள்ளார் என்று ஜிசோத்தி அவர்கள் அறிவித்தார்.

அருள் பணியாளர்கள், மற்றும் திருஅவைத் தலைவர்களால் பாலியல் வழியில் இழைக்கப்பட்டுள்ள தவறுகள், உலகின் பல நாடுகளில் நிகழ்ந்துள்ளதால், இந்தப் பிரச்சனையை உலகளாவிய பிரதிநிதிகளின் கூட்டத்தில் விவாதிப்பதே தகுந்த வழிமுறை என்று வத்திக்கான் அறிக்கை கூறுகிறது.

இந்தக் கூட்டத்தில் நடைபெறும் கருத்துப் பரிமாற்றங்கள், மேய்ப்புப்பணி அக்கறையுடன் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதிலும், இது, ஏட்டளவு விவாதங்களாக இருக்கக்கூடாது என்பதிலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெளிவாக இருக்கிறார் என்பதை, இவ்வறிக்கை வலியுறுத்திக் கூறுகிறது.

நடைபெறவிருக்கும் இந்தக் கூட்டத்தைக் குறித்து ஊடகங்களில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியிருப்பதை உணர்ந்துள்ள திருஅவை, இந்தப் பிரச்சனையை திருஅவை அணுகுவது இது முதல் முறை அல்ல என்றும், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக திருஅவை, பல்வேறு முறையில் அணுகி வந்துள்ள இந்த துன்பகரமான பயணத்தின் மற்றுமொரு முயற்சியே, பிப்ரவரியில் நடைபெறும் கூட்டம் என்றும், வத்திக்கான் அறிக்கை கூறியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 January 2019, 15:21