தேடுதல்

கர்தினால் லூயில் லதாரியா கர்தினால் லூயில் லதாரியா 

பாங்காக்கில் விசுவாச கோட்பாடு சார்ந்த கூட்டம்

விசுவாசக்கோட்பாட்டு பேராயத்திற்கும், தல ஆயர் பேரவைகளின் விசுவாசக்கோட்பாட்டு பணிக்குழுக்களுக்கும் இடையே உறவை மேம்படுத்தும் விதமாக, சந்திப்புகள் இடம்பெற்று வருகின்றன

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

திருப்பீட விசுவாசக்கோட்பாட்டு பேராய பிரதிநிதிகள் குழுவும், ஆசிய ஆயர் பேரவைகளின் விசுவாசக்கோட்பாட்டு பணிக்குழுக்களின் தலைவர்களும், சனவரி 15, வருகிற செவ்வாயன்று, தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில், நான்கு நாள் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர்.

விசுவாசக்கோட்பாட்டு பேராயத் தலைவர் கர்தினால் லூயில் லதாரியா, அதன் இணைச்செயலர் பேராயர் அகுஸ்தின் தி நோய்யா ஆகியோருக்கும், ஆசிய ஆயர் பேரவைகளின் விசுவாச கோட்பாட்டு பணிக்குழுக்களின் தலைவர்களுக்கும் இடையே கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

விசுவாசக்கோட்பாட்டை ஊக்குவித்து, பேணி பாதுகாப்பதில், தல ஆயர்கள் கொண்டிருக்கும் பொறுப்புமிக்க செயல்களுக்கு, விசுவாசக்கோட்பாட்டு பேராயம் முழு ஆதரவளிக்கின்றது என்பதை வெளிப்படுத்துவதாய், இக்கூட்டம் அமைகின்றது என்று கூறப்பட்டுள்ளது.  

பாங்காக் Baan Phu Waan மேய்ப்புப்பணி மையத்தில் நடைபெறவிருக்கும் இக்கூட்டம்,  சனவரி 18ம் தேதி நிறைவடையும்.

புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களின் அறிவுரையின்படி, 1967ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி, திருப்பீட விசுவாசக்கோட்பாட்டு பேராயம் வெளியிட்ட அறிக்கையில், அனைத்து ஆயர் பேரவைகளும் தங்களின்  விசுவாசக்கோட்பாட்டு பணிக்குழுக்களை உருவாக்குமாறு கேட்டுக்கொண்டது. இந்தப் பணிக்குழுக்கள், விசுவாசம் மற்றும் அறநெறி சார்ந்தவைகளில், தல ஆயர் பேரவைகளுக்கு உதவும் ஆலோசனை அமைப்பாக விளங்கும் என்றும் கூறப்பட்டது.

விசுவாசக்கோட்பாட்டு பேராயத்திற்கும், ஆயர் பேரவைகளின் விசுவாசக்கோட்பாட்டு பணிக்குழுக்களுக்கும் இடையே உறவை மேம்படுத்தும் விதமாக, அவ்வப்போது, இவற்றின் பிரதிநிதிகள் சந்திப்பு இடம்பெற வேண்டுமென்று, முன்ளாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், இப்பேராயத்தின் தலைவராகப் பணியாற்றியபோது, 1982ம் ஆண்டு தீர்மானித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 January 2019, 15:55