தேடுதல்

திருப்பீடத் தகவல் தொடர்பு அவையின் செய்திப் பிரிவு இயக்குனர் – முனைவர் அந்த்ரேயா தொர்னியெல்லி திருப்பீடத் தகவல் தொடர்பு அவையின் செய்திப் பிரிவு இயக்குனர் – முனைவர் அந்த்ரேயா தொர்னியெல்லி 

வத்திக்கானில் பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் முக்கிய கூட்டம்

ஆயர் பேரவைகளின் தலைவர்களுடன் இணைந்து, பிப்ரவரி மாதம், வத்திக்கானில் நடைபெறவிருக்கும் கூட்டத்தை, ஊடகங்களின் பரபரப்புடன் நோக்குவதற்குப் பதில், மேய்ப்புப்பணி சார்ந்த அக்கறையுடன் நோக்குவது முக்கியம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கத்தோலிக்கத் திருஅவையின் அருள்பணியாளர்கள், மற்றும், ஆயர்கள் சிலரால், பாலியல் வழியில் துன்பங்களை அடைந்தோரைக் காக்கும் ஒரு முயற்சியாக, உலகின் அனைத்து ஆயர் பேரவைகளின் தலைவர்களுடன் இணைந்து, வத்திக்கானில் நடைபெறவிருக்கும் கூட்டத்தைக் குறித்து, திருப்பீடத் தகவல் தொடர்பு அவையின் செய்திப் பிரிவு இயக்குனர் – முனைவர் அந்த்ரேயா தொர்னியெல்லி அவர்கள், செய்திக் கட்டுரையொன்றை வெளியிட்டுள்ளார்.

பிப்ரவரி 21ம் தேதி முதல், 24ம் தேதி முடிய வத்திக்கானில் நடைபெறவிருக்கும் இந்த முக்கியமான கூட்டம், ஊடகங்களின் கவனத்தை பெருமளவு ஈர்த்துள்ளது என்பதை, தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள முனைவர் தொர்னியெல்லி அவர்கள், நடைபெறவிருக்கும் இந்தக் கூட்டத்தை, ஊடகங்களின் பரபரப்புடன் நோக்குவதற்குப் பதில், மேய்ப்புப்பணி சார்ந்த அக்கறையுடன் நோக்குவது முக்கியம் என்று கூறியுள்ளார்.

கடந்த பதினாறு ஆண்டளவாக திருஅவையை பெருமளவு பாதித்துவரும் இந்த பிரச்சனைக்கு, முன்னாள் திருத்தந்தையர் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற வழியில் தீர்வுகளைக் கண்டு வந்துள்ளனர் என்பதையும் இவ்வேளையில் மறக்கக்கூடாது என்று தொர்னியெல்லி அவர்கள் நினைவுறுத்தியுள்ளார்.

உலகெங்கிலும் உள்ள அனைத்து ஆயர் பேரவைத் தலைவர்களும் பங்கேற்கும் கூட்டம், திருஅவை வரலாற்றில் முதல் முறையாக நடைபெறுகிறது என்பது, இந்தப் பிரச்சனையைக் குறித்து, திருஅவையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் கொண்டிருக்கும் அக்கறையை வெளிப்படுத்துகிறது என்று தொர்னியெல்லி அவர்கள் கூறியுள்ளார்.

இந்தக் கூட்டத்தின் வழியே தெளிவாக்கப்படும் வழிமுறைகள், சட்டதிட்டங்கள் ஆகியவை மட்டும், இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகள் அல்ல, மாறாக, ஒவ்வொருவரின் மனமாற்றமே இந்தப் பிரச்சனையைத் தீர்க்கும் முக்கியமான முதல் அடி என்று திருத்தந்தை வலியுறுத்தி வருவதையும், தொர்னியெல்லி அவர்கள், தன் கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 January 2019, 15:41