பேராயர் பெர்னார்த்தித்தோ அவுசா பேராயர் பெர்னார்த்தித்தோ அவுசா  

உரையாடல்களே அமைதியையும், தீர்வையும் கொணரும்

மத்தியக்கிழக்குப் பகுதியில், குறிப்பாக, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கிடையே நிலவிவரும் இறுக்கமான சூழலைக் குறித்து திருப்பீடம் கவலை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பல்வேறு வன்முறைகளால் பாறையைப்போல் இறுகிப்போயிருக்கும் இவ்வுலகில், அமைதி என்ற சிறு மலர், வேர்விட்டு, பூத்திட முயற்சி செய்கிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2019ம் ஆண்டின் அமைதிநாள் செய்தியில் கூறியதை, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், பன்னாட்டு கூட்டமொன்றில் எடுத்துரைத்தார்.

மத்தியக்கிழக்குப் பகுதியில், குறிப்பாக, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கிடையே நிலவிவரும் இறுக்கமான சூழலைக் குறித்து, ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்ற பேராயர் பெர்னார்த்தித்தோ அவுசா அவர்கள், இவ்விரு நாடுகளைக் குறித்து தெளிவான விவாதங்கள் மேற்கொள்வது அவசியம் என்று கூறினார்.

இஸ்ரேல் பாலஸ்தீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே, அறிவுசார்ந்த முறையில் முறையில் நடைபெறும் உரையாடல்களே அமைதியையும், தீர்வையும் கொணரும் என்றும், இதற்கு மாறாக, வன்முறையைத் தூண்டிவிடும் வெறுப்பு உரைகளே பெரும்பாலும் இடம்பெறுகின்றன என்றும், பேராயர் அவுசா அவர்கள் கவலை வெளியிட்டார்.

மத்தியக் கிழக்குப் பகுதியில் பல நாடுகளில், மக்கள், மிகக் கடினமான மனிதாபிமான நெருக்கடிகளைச் சந்திக்கின்றனர் என்பதை, தன் உரையில் சுட்டிக்காட்டிய பேராயர் அவுசா அவர்கள், அரசியல் கருத்தியல்களைத் தாண்டி, இம்மக்களுக்கு உதவிகள் செய்வது, மிக அவசரமானத் தேவை என்பதையும் வலியுறுத்திக் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 January 2019, 15:37