100 குடில்களுள் ஒன்று 100 குடில்களுள் ஒன்று 

வத்திக்கானில் நடைபெறும் "100 குடில்கள்" கண்காட்சி

கிறிஸ்மஸ் குடில்கள் கொண்ட ஒரு கண்காட்சி, வத்திக்கானில், சனவரி 13 வரை மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஏறத்தாழ 200 கிறிஸ்மஸ் குடில்கள் கொண்ட ஒரு கண்காட்சி, வத்திக்கானில் புனித பத்தாம் பயஸ் அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

1976ம் ஆண்டு முதல், கடந்த 43 ஆண்டுகளாக, "100 குடில்கள்" என்ற பெயருடன் நடைபெற்றுவரும் இந்தக் கண்காட்சியில், இத்தாலியின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த குடில்களும், இன்னும் உலகின் 25 நாடுகளைச் சேர்ந்த குடில்களும் இடம்பெற்றுள்ளன.

1223ம் ஆண்டு, அசிசி நகரின் புனித பிரான்சிஸ் அவர்கள், கிரேச்சோ என்ற ஊரில் அமைந்திருந்த ஒரு குகையில், கிறிஸ்து பிறப்பு காட்சியை முதன்முதலாக உருவாக்கினார் என்று வரலாறு கூறுகிறது.

இந்த மரபை மீண்டும் வளர்ப்பதற்கு, உரோம் நகரின் Piazza del Popolo என்ற இடத்தில், Manlio Menaglia என்பவர், 1976ம் ஆண்டு, “100 கிறிஸ்மஸ் குடில்கள்” என்ற முயற்சியைத் துவக்கினார்.

பல்வேறு கலைஞர்கள், மற்றும் மாணவர்களால் உருவாக்கப்படும் இந்தக் குடில்கள், இவ்வாண்டு, முதல் முறையாக Piazza del Popolo சதுக்கத்திலிருந்து, வத்திக்கானில் அமைந்துள்ள புனித பத்தாம் பயஸ் அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

2018ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கிறிஸ்மஸ் குடிலும், கிறிஸ்மஸ் மரமும் துவக்கிவைக்கப்பட்ட வேளையில், இந்த '100 குடில்கள்' கண்காட்சியும் திறந்து வைக்கப்பட்டது.

நுழைவுக்கட்டணம் ஏதுமின்றி அனைவரையும் வரவேற்கும் இந்தக் கண்காட்சி, சனவரி 13, வருகிற ஞாயிறு முடிய நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 January 2019, 15:18