தேடுதல்

Vatican News
வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா 

வத்திக்கான் நகர நிர்வாகத்திற்கு புதிய சட்டங்கள்

வத்திக்கான் நகர நிர்வாகத்திற்கு புதிய சட்டங்கள், 2019ம் ஆண்டு ஜூன் 7ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

உலகின் மிகச் சிறிய நாடான வத்திக்கானின் அலுவலகங்கள் மற்றும் செயல்பாடுகளை எளிமையாக்கும் விதமாக, வத்திக்கான் நகர நாட்டின் அமைப்புமுறை மற்றும் அதன் நிர்வாகம் சார்ந்த புதிய சட்டங்களுக்கு இசைவு தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

"motu proprio" அதாவது, தன் சொந்த விருப்பத்தால் எனப்படும் அறிக்கை வழியாக,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் நாட்டு நிர்வாகத்தின் மறுசீரமைப்புக்கென ஒப்புதல் அளித்துள்ள புதிய சட்டங்கள், டிசம்பர் 6, இவ்வியாழன் மாலையில் வெளியிடப்பட்டன.

வத்திக்கான் நாடு, திருத்தந்தைக்கு ஆற்றவேண்டிய பணியையும், அந்நாட்டிற்குள் அமைந்துள்ள பல்வேறு துறைகள் மற்றும் நடவடிக்கைகளின் சிறப்பான நோக்கத்தையும் உறுதிசெய்துள்ள அதேவேளை, தற்போதைய தேவைகளுக்கேற்ப, தகுதியானதாக ஆக்குவதற்கு, மறுசீரமைப்பு அவசியமாகின்றது என்று, திருத்தந்தை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இப்புதிய சட்டங்களின்படி, திருத்தந்தையரின் காஸ்தெல்கந்தோல்ஃபோ கோடை விடுமுறை மாளிகையின் சொத்து மற்றும் அதன் அன்றாட நடவடிக்கைகள், பாப்பிறை மாளிகையின் நிர்வாகத்தின்கீழும், அந்த மாளிகையின் அருங்காட்சியக நடவடிக்கைகள், அருங்காட்சியக நிர்வாகத்தின் கீழும் இயங்கும்.  

வத்திக்கான் நகர நாட்டின் நிர்வாகத்துறையின் தலைவரான கர்தினால் ஜூசப்பே பெர்த்தெல்லோ அவர்களிடம், இந்த மறுசீரமைப்பு சட்டங்கள் குறித்த வரைவு தொகுப்புப் பணியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒப்படைத்தார். இப்பணி, 2017ம் ஆண்டு பிப்ரவரியில் ஆரம்பிக்கப்பட்டது.

வத்திக்கான் நகர நிர்வாகத்திற்குரிய புதிய சட்டங்கள், 2019ம் ஆண்டு ஜூன் 7ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

07 December 2018, 14:59