தேடுதல்

 திருத்தந்தையுடன் கர்தினால் Blaise Joseph Cupich திருத்தந்தையுடன் கர்தினால் Blaise Joseph Cupich 

பாலியல் வழி துன்பமடைந்தோரைச் சந்திக்க அழைப்பு

கத்தோலிக்கத் திருஅவை, பாலியல் கொடுமைகளை அடைந்தவர்களுக்கு தகுந்த பதிலிறுப்பை தருவதற்கு தவறினால், திருஅவையின் நம்பகத்தன்மை பெருமளவு குலைந்துவிடும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருஅவையின் தலைவர்களாலும், அருள் பணியாளர்களாலும் நிகழ்ந்துள்ள பாலியல் கொடுமைகளைக் குறித்து, 2019ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி முதல் 24ம் தேதி முடிய வத்திக்கானில் நடைபெறவிருக்கும் ஒரு முக்கிய கூட்டத்தில் கலந்துகொள்வோருக்கு, இக்கூட்டத்தை ஏற்பாடு செய்யும் குழுவினர், டிசம்பர் 18, இச்செவ்வாயன்று ஒரு மடலை அனுப்பியுள்ளனர்.

இந்தக் கொடுமைகளை அடைந்தவர்களுக்கு தகுந்த பதிலிறுப்பை கத்தோலிக்கத் திருஅவை தருவதற்கு தவறினால், திருஅவையின் நம்பகத்தன்மை பெருமளவு குலைந்துவிடும் என்று இக்குழுவினர் கூறியுள்ளனர்.

சிக்காகோ பேராயர் கர்தினால் Blase Cupich, மும்பை பேராயர், கர்தினால் Oswald Gracias, மால்ட்டா பேராயரும், திருஅவை விசுவாசக் கோட்பாடுகள் பேராயத்தின் உதவிச் செயலருமான Charles Scicluna, மற்றும், கிரகோரியன் பாப்பிறை பல்கலைக் கழகப் பேராசியர், இயேசு சபை அருள்பணி Hans Zollner ஆகியோர் இணைந்து, இம்மடலை அனுப்பியுள்ளனர்.

பிப்ரவரி கூட்டத்திற்கு வருவதற்கு முன்னர், இக்கூட்டத்தில் கலந்துகொள்வோர், அவர்கள் வாழும் பகுதியில் பாலியல் கொடுமைகளை அடைந்தவர்களைச் சந்திப்பது மிக முக்கியமான கடமை என்று, இம்மடலில் கூறப்பட்டுள்ளது.

கத்தோலிக்க திருஅவை என்ற உலகளாவிய அளவில் இந்தப் பிரச்சனையை சந்திக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் வேளையில், அந்தந்த மறைமாவட்டங்களில் இந்தப் பிரச்சனைக்கு பொறுப்பேற்று அவற்றைத் தீர்க்கும் மனப் பக்குவத்தை அனைவரும் பெறவேண்டும் என்று இம்மடலில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

திருப்பீடத்தின் செய்தித் தொடர்பாளர், கிரேக் புர்கே அவர்கள், இச்செவ்வாயன்று, இம்மடலை, செய்தியாளர்களிடம் வெளியிட்ட வேளையில், பிப்ரவரி கூட்டத்தில், பொறுப்புணர்வு, நடத்தைகளுக்கு கணக்கு கொடுத்தல், மற்றும் வெளிப்படைத் தன்மை ஆகிய மூன்று அம்சங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்று கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 December 2018, 16:00