தேடுதல்

கிரகோரியன் பாப்பிறை பல்கலைக் கழகத்தில் கர்தினால் டர்க்சன் பங்கேற்கும் மனித உரிமைகள் கருத்தரங்கு கிரகோரியன் பாப்பிறை பல்கலைக் கழகத்தில் கர்தினால் டர்க்சன் பங்கேற்கும் மனித உரிமைகள் கருத்தரங்கு 

மனித உரிமைகள் பன்னாட்டு கருத்தரங்கில் கர்தினால் டர்க்சன்

மனித உரிமைகளின் அனைத்துலக அறிக்கை வெளியிடப்பட்டு 70 ஆண்டுகள் ஆகியும், அவ்வறிக்கையின் பல கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை – கர்தினால் டர்க்சன்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

அமைதியில் வாழ்வதற்கும், ஒருங்கிணைந்த முன்னேற்றத்திற்கும் உலகினர் கொண்டிருக்கும் அடிப்படை உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு, அவற்றுக்கு போதுமான அளவு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், பன்னாட்டு கருத்தரங்கு ஒன்றில் கேட்டுக்கொண்டார்.

உரோம் நகரின் கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில், மனித உரிமைகள் குறித்த, பன்னாட்டு கருத்தரங்கு ஒன்றை, டிசம்பர் 10, இத்திங்களன்று ஆரம்பித்து வைத்து உரையாற்றிய, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், இவ்வாறு கூறினார்.

எழுபது ஆண்டுகளுக்கு முன்னர், உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் குறித்த அறிக்கை, 1993ம் ஆண்டில், வியன்னாவில் 171 நாடுகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட, மனித உரிமைகள் குறித்த உலக மாநாட்டிலும் உறுதி செய்யப்பட்டது எனவும் கர்தினால் கூறினார்.   

மனித உரிமைகள் குறித்த இந்த அறிக்கைகளுக்கு சிலவேளைகளில், முரண்பாடான விளக்கங்கள் அளிக்கப்படுவது, அவை அதிகமாக அரசியலாக்கப்படுவது மற்றும், அவை மீறப்படுவது கவலை தருகின்றது எனவும், கர்தினால் டர்க்சன் அவர்கள் கூறினார்.

இக்காலத்தில், அனைத்து மனிதரின் உரிமைகள் காக்கப்படும் விதம் குறித்து சிந்திக்குமாறு வலியுறுத்திய கர்தினால் டர்க்சன் அவர்கள், உலகின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் ஆயுத மோதல்களில், வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு, மக்களின் வாழ்வுரிமைகள் மீறப்படுகின்றன எனவும், கவலை தெரிவித்தார்.

மனித உரிமைகளின் அனைத்துலக அறிக்கை வெளியிடப்பட்டதன் 70ம் ஆண்டு (பாரிஸ், 10,டிச.1948) நிறைவு மற்றும், மனித உரிமை நடவடிக்கைகளுக்குரிய வியன்னா வரைவு திட்டம் வெளியிடப்பட்டதன் 25ம் ஆண்டு (25,ஜூன்,1993) நிறைவையொட்டி நடைபெறும் இக்கருத்தரங்கு, டிசம்பர் 11, இச்செவ்வாயன்று நிறைவடைந்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 December 2018, 15:53