தேடுதல்

மர்ரகேஷ் நகரில்  பன்னாட்டு கூட்டத்தில் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ மர்ரகேஷ் நகரில் பன்னாட்டு கூட்டத்தில் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ 

பாதுகாப்பான, முறையான குடிபெயர்தல் குறித்து திருப்பீடம்

குடிபெயர்வோரைக் குறித்து எடுக்கப்படும் முடிவுகளில், அவர்களையும் இணைத்துச் செயல்படும்போது, குடிபெயர்தல் என்ற நிலை, நீடித்த, நிலையான தீர்வுகளைத் தரும் - கர்தினால் பரோலின்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பாதுகாப்பான, முறையான, கட்டுப்பாடுடன் கூடிய குடிபெயர்தல் முயற்சிகளில், அரசியல், மற்றும் சமுதாய அமைப்புக்கள் ஒருங்கிணைந்து செயலாற்றவேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர், பன்னாட்டு கூட்டமொன்றில் உரையாற்றினார்.

டிசம்பர் 10,11 ஆகிய இரு நாள்கள், மொராக்கோ நாட்டின் மர்ரகேஷ் நகரில் நடைபெற்ற ஒரு பன்னாட்டு கூட்டத்தில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இச்செவ்வாயன்று வழங்கிய உரையில், குடிபெயர்தல் என்ற உலகளாவிய எதார்த்தத்தில், அனைவரும் பொறுப்புடன் பங்கேற்கவேண்டும் என்று கூறினார்.

குடிபெயர்வோரைக் குறித்து எடுக்கப்படும் முடிவுகளில், அவர்களையும் இணைத்துச் செயல்படும்போது, குடிபெயர்தல் என்ற நிலை, நீடித்த, நிலையான தீர்வுகளைத் தரும் என்று, கர்தினால் பரோலின் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

குடிபெயர்தல், என்ற உண்மையை, 'வரவேற்பது', 'பாதுகாப்பது' மற்றும் 'வளர்ப்பது' என்ற மூன்று அம்சங்களுடன் அணுகும்போது, குடிபெயர்வோர், தாங்கள் தஞ்சமடையும் நாடுகளின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியாக இருப்பர் என்பதையும், கர்தினால் பரோலின் அவர்கள் தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.

பெரும்பாலான நாடுகளில், குடிபெயர்தலைக் குறித்து அச்சமூட்டும் கருத்துக்கள் பரப்பப்பட்டு வந்தாலும், இந்த உலகளாவிய போக்கு, நாம் அனைவரும் ஒரே மனித குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும், இவ்வுலகின் வளங்களை அனைவரும் சமமாகப் பகிர்ந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளோம் என்பதையும், நமக்கு உணர்த்துகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ள கருத்தை, கர்தினால் பரோலின் அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.

160க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்ற இந்த பன்னாட்டு  கூட்டத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார் என்பதும், தன் சார்பாக, கர்தினால் பரோலின் அவர்களை இக்கூட்டத்திற்கு அனுப்பிவைத்த திருத்தந்தை, மொராக்கோ நாட்டு அரசுத் தலைவரின் அழைப்பை ஏற்று, அந்நாட்டிற்கு, 2019ம் ஆண்டு மார்ச் 30,31 ஆகிய இரு நாள்கள் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வார் என்பதும் குறிப்பிடத்தக்கன

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 December 2018, 15:51