தேடுதல்

போலந்து நாட்டின் Katowice நகரில் காலநிலை மாற்றம் குறித்த உலக உச்சி மாநாட்டில் கர்தினால் பியெத்ரோ பரோலின் போலந்து நாட்டின் Katowice நகரில் காலநிலை மாற்றம் குறித்த உலக உச்சி மாநாட்டில் கர்தினால் பியெத்ரோ பரோலின் 

நம் பொதுவான இல்லத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைவோம்

போலந்து நாட்டில் நடைபெற்றுவரும் காலநிலை மாற்றம் குறித்த உலக உச்சி மாநாட்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சார்பில் திருப்பீட செயலர் உரையாற்றினார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

காலநிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படுவதற்கும், நம் பொதுவாகிய இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாப்பதற்கும், உலகத் தலைவர்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது என்று, திருப்பீட செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், உலக மாநாடு ஒன்றில் கூறினார்.

போலந்து நாட்டின் Katowice நகரில், டிசம்பர் 2 இஞ்ஞாயிறன்று தொடங்கியுள்ள காலநிலை மாற்றம் (Cop24) குறித்த உலக உச்சி மாநாட்டில், டிசம்பர் 3, இத்திங்களன்று உரையாற்றிய, கர்தினால் பரோலின் அவர்கள், இம்மாநாட்டில் கலந்துகொள்ளும், 150க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களுக்கும், ஏனைய பிரதிநிதிகளுக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், நல்வாழ்த்தை முதலில் தெரிவித்தார்.

காலநிலை மாற்றம் குறித்து, கடந்த அக்டோபரில் வெளியிடப்பட்ட உயர்மட்ட குழுவின் அறிக்கையில், நம் பொதுவான இல்லத்தைக் கட்டியெழுப்புவதற்கும், உலக அளவில் வெப்பநிலை அதிகரிப்பை மட்டுப்படுத்துவதற்கும், அனைத்து நாடுகளின் ஒத்துழைப்பு மிகவும் தேவைப்படுகின்றது என வலியுறுத்தப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிப் பேசினார், கர்தினால் பரோலின்.

மனிதரின் மாண்பை மதிப்பது, ஏழ்மையை அகற்றுவது, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்தை ஊக்குவிப்பது, காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் துன்பங்களை அகற்றுவதற்கு பொறுப்புள்ள வகையில் நடவடிக்கை எடுப்பது, இப்போதைய மற்றும் வருங்காலத்தின் தேவைகளை நிறைவேற்றுவது போன்றவை, பாரிஸ் ஒப்பந்தங்கள் செயல்படுத்தப்படுவதற்கு அவசியம் என திருப்பீடம் கருதுகின்றது என்றும், கர்தினால் உரையாற்றினார்.

இதற்கு அரசியல் மட்டத்தில், உறுதியான விருப்பம் தேவைப்படுகின்றது எனவும் கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், ஏழ்மையை அகற்றுதல், மனித மாண்பைக் காத்தல், இயற்கையைப் பாதுகாத்தல் குறித்தவைகளில், இறைவா உமக்கே புகழ் (Laudato Si’) என்ற திருமடலில், திருத்தந்தை குறிப்பிட்டுள்ள பரிந்துரைகளையும் எடுத்துரைத்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 December 2018, 15:22