ஈராக்கில் கர்தினால் பரோலின் ஈராக்கில் கர்தினால் பரோலின் 

ஈராக் மக்கள் அச்சத்தின் இருளில் சுடர்விட அழைக்கப்படுகின்றனர்

திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின் அவர்கள், ஈராக் நாட்டில், டிசம்பர் 24-28 வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

ஈராக் நாட்டில் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும், தனிநபர்களாகவும், சமூகமாகவும்,  அச்சம் மற்றும் அர்த்தமற்ற இருளில் சுடர்விடவும், ஒளியின் வார்த்தைகள் மற்றும் செயல்களால் வெறுப்பையும், பொறுப்பற்றதன்மையையும் களையவும் அழைக்கப்பட்டுள்ளனர் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

டிசம்பர் 24, இத்திங்கள் முதல் டிசம்பர் 28, வருகிற வெள்ளிவரை ஈராக் நாட்டில் பயணம் மேற்கொண்டுவரும், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், கிறிஸ்மஸ் நள்ளிரவு திருப்பலியில், இவ்வாறு கூறினார்.

பாக்தாத், புனித யோசேப்பு பேராலயத்தில், கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை, கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்களுடன் இணைந்து கிறிஸ்மஸ் நள்ளிரவு கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றிய கர்தினால் பரோலின் அவர்கள், அமைதி, உண்மை, நீதி, சுதந்திரம் மற்றும் அன்பின் விதைகளை, நிரம்ப விதைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

ஈராக் அரசுத்தலைவர் மாளிகையில், பிரதமர் Adil Abud Mahdi மற்றும் அரசு பிரதிநிதிகளுக்கு, கிறிஸ்மஸ் செய்தி வழங்கிய கர்தினால் பரோலின் அவர்கள், மிகவும் அன்புள்ள ஈராக் மக்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது நல்வாழ்த்தை வழங்குவதாகத் தெரிவித்தார்.

ஈராக் மக்களுக்கு, நற்செய்தியின் நம்பிக்கை மற்றும் அமைதிச் செய்தியைக் கொண்டு வந்திருப்பதாகக் கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், பன்மைத்தன்மை கொண்ட மக்களிடம் வேறுபாடு காட்டாமல், ஒருவர் ஒருவரை ஊக்கப்படுத்துவதற்கான வாய்ப்புக்களைக் கண்டறியுமாறும் வலியுறுத்தினார்.  

ஈராக்கில் கீழைவழிபாட்டுமுறை திருஅவைகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு பிரதிநிதிகளையும், இந்நாள்களில் சந்தித்து வருகிறார், கர்தினால் பரோலின்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 December 2018, 16:08