தேடுதல்

Vatican News
கடலிலிருந்து காப்பாற்றப்பட்ட புலம்பெயர்ந்தோர் கடலிலிருந்து காப்பாற்றப்பட்ட புலம்பெயர்ந்தோர்  (ANSA)

குடிபெயர்வு குறித்த, உலகளாவிய ஒப்பந்த முயற்சியில் திருப்பீடம்

குடிபெயர்வு குறித்த, உலகளாவிய ஒப்பந்தம் கொண்டுவருவது குறித்த முதல் பன்னாட்டு மாநாடு, Marrakechல், டிசம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெறும்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

பாதுகாப்பான, ஒழுங்கான மற்றும் முறைப்படியான குடிபெயர்வு குறித்து, உலகளாவிய ஒப்பந்தம் ஒன்றைக் கொண்டுவருவதற்கு, பல்வேறு உலக அரசுகள் எடுக்கும் முயற்சிகளில் திருப்பீடமும் இணைகின்றது என, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.

மொரோக்கோ நாட்டின் Marrakechல்,  டிசம்பர் 10, வருகிற திங்களன்று நடைபெறவிருக்கும் இரண்டு நாள்கள், உலகளாவிய மாநாட்டில், குடிபெயர்வு குறித்து, உலகளாவிய ஒப்பந்தம் ஒன்றை உருவாக்குவதற்கு, பல்வேறு நாடுகளும், அரசு-சாரா பன்னாட்டு அமைப்புகளும் கலந்துரையாடவிருக்கின்றன.

இம்மாநாடு குறித்து, அறிக்கை வெளியிட்ட ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை, இத்தகைய பன்னாட்டு மாநாடு முதல்முறையாக இடம்பெறவுள்ளது என்றும், பல்வேறு அரசுகள், இத்தகைய முயற்சியை எடுக்கத் தொடங்கியதிலிருந்து திருப்பீடம் அதற்கு ஆதரவளித்து வருகின்றது என்றும் கூறியுள்ளது.

புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோரை, வரவேற்றல், அவர்களைப் பாதுகாத்தல், அவர்களை ஊக்குவித்து, சமுதாயத்தோடு இணைத்தல் ஆகிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நான்கு செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் விதமாக, திருப்பீடமும், குடிபெயர்வு குறித்த, உலகளாவிய ஒப்பந்த முயற்சியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றது எனவும் கூறப்பட்டுள்ளது.

07 December 2018, 14:56